மருந்து-மாத்திரைகள் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பாரசிடமால் மாத்திரை முதல் பாரசிடமால் கலந்துள்ள அனைத்து வகை மருந்துகளும் விலை உயர்ந்துள்ளது.
850 வகையான மருந்துகள் விலை 10 முதல்10.07சதவீதம் வரை அதிகரித்துள்ளது
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 850 வகை மருந்துகளும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பவை. அவைகளுக்கு 10 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.
அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் ஆயிரக்கணக்கான மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள் உள்ளன. இது தவிர சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினைகள் போன்ற நாள்பட்ட வியாதிகளுக்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டிய கட்டாய சூழ்நிலையில் லட்சக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்.
அவர்களை பொறுத்த வரை மாதம் தோறும் மாத்திரைகளுக்காகவே தனியாக பட்ஜெட் போடுகிறார்கள். இனி அவர்களின் பட்ஜெட்டில் மாதம் குறைந்தபட்சம் ரூ.1000 வரை கூடுதல் செலவாகலாம்.
காய்ச்சல், சளி என்ற சாதாரண மருந்து மாத்திரகள் விலை மிகவும் குறைவுதான். அதை வாங்கி சாப்பிட முடியாத நிலையில் பெரும்பாலானவர்கள் இல்லை.
ஆனால் உயிர்காக்கும் ஏராளமான விலை உயர்ந்த மாத்திரைகள் உள்ளன. இந்த விலை உயர்வு மூலம் அவைகள் கட்டுப்பாடு இல்லாமல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும்.
புற்று நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ஒரு ஊசியின் விலை சுமார் ரூ.4 ஆயிரம். அதில் 4 ஊசிகள் செலுத்த வேண்டும். அதாவது ரூ.16 ஆயிரம் செலவழிக்க வேண்டும்.இனி ரூ. ஆயிரம் வரை விலை உயரும். இதனால் அவர்களுக்கு கூடுதலாக ரூ.4 ஆயிரம் செலவாகும். அதுவும் ஒரு கட்ட செலவு அல்ல. பலமுறை கூட அந்த ஊசி செலுத்த வேண்டியது வரலாம்.
இதே போல் உயிர்காக்கும் பல மருந்துகள் விலை ஆயிரக்கணக்கில் உள்ளது. அவைகள் மேலும் விலை உயர்த்தப்படுவது நோய் தாக்கி பெருளாதாரத்தை இழந்து நெருக்கடிக்குள் தவித்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான குடும் பங்களுக்கு சுமையாகவே இருக்கும்.மருந்துகள் தயாரிப்பு, விற்பனையை பொறுத்தவரை உற்பத்தி செலவை விட பல மடங்கு கூடுதல் விலை நிர்ணயித்து விற்கப்படுகிறது. தொழில் போட்டியில் பல்வேறு செலவினங்களுக்கு ஏராளமாக செலவிடுகிறார்கள்.
அரசாங்கம் அனைத்து மருந்துகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கொள்வதோடு உற்பத்தி செலவில் இருந்து குறிப்பிட்ட லாபத்தை வைத்து விற்பதற்கான கடுமையான விதி முறைகளை அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சாதாரண மக்களின் சுமையை குறைக்க முடியாது என்கிறார்கள் மருந்து வர்த்தகர்கள்.
