ரஷ்யா – உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பேசியதாவது,
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் தங்களின் படிப்பை தொடர அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, கஜகஸ்தான், போலந்து ஆகிய நாடுகளிடம் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். ஏனெனில் அவர்களும் உக்ரைன் மாதிரியான கல்விமுறையை கொண்டுள்ளன. அரசியல் லாபம் பெறுவதற்காக மத்திய அமைச்சர்களை அரசு அண்டை நாடுகளுக்கு அனுப்பியதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர். ஆனால், அமைச்சர்களின் முயற்சியால் மாணவர்களை மீட்பதற்கு உதவின.
உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அமைச்சர்கள் செல்லாமல் இருந்திருந்தால், அவர்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைத்திருக்காது. உக்ரைனின் புச்சாவில் நடந்த படுகொலை சம்பவத்தை எம்.பி.,க்கள் பலரும் எடுத்துரைத்தனர். இந்த அறிக்கைகள் மிகவும் கவலையளிக்கிறது. அங்கு நடந்த கொலைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது மிகவும் தீவிரமான விஷயம். சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும். ரஷ்யா – உக்ரைன் மோதலை இந்தியா எதிர்க்கிறது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
ரத்தம் சிந்துவதன் மூலமும், அப்பாவி மக்களின் உயிர்களைப் பலி கொடுப்பதன் மூலமும் எந்தத் தீர்வையும் எட்ட முடியாது என்று நம்புகிறோம். இன்றைய காலகட்டத்தில், எந்தவொரு பிரச்னைக்கும் பேச்சுவார்த்தையே சரியான பதில். அனைத்து நாடுகளின் சர்வதேச சட்டம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை பிற நாடுகள் மதிக்க வேண்டும். இந்தியா அமைதியின் பக்கத்தைத்தான் தேர்ந்தெடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
