கொடநாடு வழக்கு தொடர்பாக இன்று சசிகலாவிடம் விசாரணை நடத்திய உயர் போலீஸ் அதிகாரிகள்..

Published:

சினிமாவை மிஞ்சிய கொடநாடு கொலை- கொள்ளை வழக்கு தொடர்பாக இன்று
சசிகலாவிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையால் கொடநாடு கொலை- கொள்ளை வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது.

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்
அவரது கொடநாடு பங்களா ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

இந்த நிலையில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாடு பங்களாவுக்குள் புகுந்த மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை தடுக்க முயன்ற காவலாளி ஓம்பகதூர் படுகொலை செய்யப்பட்டார். ஜெயலலிதா இருந்த வரையில் மிகவும் பாதுகாப்பாக இருந்த கொடநாடு பங்களாவில் நடந்த இந்த துணிகர கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கொள்ளை சம்பவத்தின்போது காயத்துடன் உயிர் தப்பிய இன்னொரு காவலாளியான கிருஷ்ண பகதூரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். கொடநாடு கொலை- கொள்ளை சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுனரான கனகராஜிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர் திடீரென சாலை விபத்தில் உயிரிழந்தார்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் கொடநாடு கொலை- கொள்ளை சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த தனிப்படையினரான சயான், வாழையாறு மனோஜ் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில் கேரள மாநிலத்தில் சயான் குடும்பத்துடன் சாலை விபத்தில் சிக்கினார். இதில் அவரது மனைவி விணு பிரியா மகள் நீது ஆகியோர் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து கொடநாடு பங்களாவில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக இருந்த தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டார்.

இப்படி கொடநாடு கொலை- கொள்ளை வழக்கு சினிமாவை மிஞ்சும் வகையில் பல்வேறு திருப்பங்களுடன் சென்று கொண்டிருந்த நிலையில், இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த சயான், மனோஜ் இருவரும் டெல்லியில் வெளியிட்ட ஆடியோவும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்-அமைச்சரான எடப்பாடி பழனிசாமிக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறிய குற்றச்சாட்டுகளும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் எடப்பாடி பழனிசாமி இதனை மறுத்தார். இப்படி கொடநாடு வழக்கு விசாரணை பல்வேறு மர்ம முடிச்சுகளுடன் நீடித்துக்கொண்டே செல்கிறது.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான ஆறுக்குட்டி, சசிகலாவின் உறவினரான விவேக், கொடநாடு பங்களா மானேஜர் நடராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து இன்று காலை ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் தி.நகரில் உள்ள சசிகலாவின் வீட்டில் விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர். சசிகலாவிடம் 500-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

கொடநாடு பங்களாவில் நடந்த கொலை- கொள்ளை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய போலீசார் அதனை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். ஐ.ஜி. சுதாகருடன் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆசிஸ் ராவத்தும் விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணை காரணமாக தி.நகரில் சசிகலா தங்கி இருக்கும் வீட்டு அருகில் பரபரப்பு நிலவியது. சசிகலாவிடம் நடத்தப்படும் விசாரணையால் கொடநாடு கொலை- கொள்ளை வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!
images 36 1 - 2026

Related articles

Recent articles

spot_img