தஞ்சை அருகே இன்று அதிகாலை நடந்த தேர்திருவிழாவில் உயர் மின் அழுத்தக் கம்பியில் தேர் உரசி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியான சம்பவம் தேர் நிலைக்கு வருவதற்கு 15 நிமிடங்கள் இருந்த நிலையில் இந்த கோரசம்பவம் நிகழ்ந்ததாக களிமேடு மக்கள் கூறியுள்ளனர்.
களிமேடு அப்பர்மட திருவிழாவில் தேர் விபத்து குறித்து தேர்திருவிழா காணவந்த களிமேடு பகுதி மக்கள் கூறுகையில், தேர் நிலைக்கு வருவதற்கு 15 நிமிடங்கள் இருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தேர் வரும் வழியில் தண்ணீர் ஊற்றப்பட்டு வந்ததால் மின்சாரம் பாய்ந்தபோது பாதிப்பு அதிகமாகி விட்டது’ என தெரிவித்தனர்.
தேர் திருவிழாவில் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: களிமேடு கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சப்பர இழுப்புத் திருவிழா நடைபெறும். இப்போது தேர் இழுக்கும்போது மேலே சென்ற உயர் அழுத்த மின் பாதையில் சப்பரத்தின் உச்சிப்பகுதி உரசியது. இது எப்படி உரசியது என்பது விசாரணையில் தெரிய வரும்.
இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் நிகழ்விடத்திலும், 8 பேர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இறந்தனர். மேலும் காயமடைந்த 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து எப்படி நடந்தது என வழக்குப்பதிந்து புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவில் முழு விவரங்கள் தெரிய வரும். குறைந்த மின் அழுத்த பாதை ஏற்கெனவே அணைக்கப்பட்டிருந்தது. உயர் மின்னழுத்த பாதை மூலம் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ5லட்சம் நிவாரணம்:-
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிப்பதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார். மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்தார் மற்றும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முதல்வர் ஸ்டாலின் தஞ்சாவூர் செல்கிறார். காலை 11:30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் அவர் அங்கிருந்து தஞ்சாவூர் செல்கிறார்.







