இன்று தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடி- மின்னலுடன் நேற்று மாலை முதல் கோடை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் தொடங்கி வாட்டி வதைத்து வருகிறது. மேலும் காஞ்சிபுரம் வேலூர், திருச்சி, மதுரை விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது.
இதனிடையே தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அவ்வப்போது மாலை நேரத்தில் மழையும் பெய்து வருகிறது.
நேற்று மதியத்திற்க்கு பின் கோவை, நாமக்கல், சேலம், பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்தது. கொடைக்கானல் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.
இன்று அக்னி நட்சத்திர வெயில் தொடங்க உள்ள நிலையில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகத்தில் அதிகபட்சமாக சத்தியமங்கலம் பகுதியில் 5செ.மீ.மழை பதிவானதாக இன்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
