உத்தர பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் திடீரென வெடித்த
விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 13ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் திடீரென வெடித்ததால் அந்த பகுதி முழுவதும் தீப்பிடித்தது. உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்பு பணியில் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியே கரும்புகையாக காட்சி அளித்தது.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் பலியானார். மேலும் படுகாயம் அடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து அறிந்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளையும் வழங்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், விபத்து குறித்து நிபுணர்களைக் கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் யோகி ஆதித்யநாத் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஹாபூர் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹாபூர் ரசாயன தொழிற்சாலை விபத்து நெஞ்சை பதற வைக்கிறது, இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்றும் பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.






