திருச்சி மணப்பாறை அடுத்த கருமலையில் மருங்காபுரி ஜமீனுக்கு சொந்தமான ஸ்ரீ கரிகிரி வரதராஜப்பெருமாள் திருக்கோயில் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் கலந்துக்கொண்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கருமலையில் மருங்காபுரி ஜமீனுக்கு சொந்தமான 96 கிராம மக்கள் வழிபடும் 700 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீ கரிகிரி வரதராஜப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் வைசாக பெருவிழாவில் நிகழாண்டு ஜூன் 3-ஆம் தேதி அங்குரார்ப்பணம், ரட்சாபந்தம் ஆகியவற்றுடன் தொடங்கிய 12 நாள் திருவிழாவில் நாள்தோறும் பல்லக்கில் இரவு சுவாமி புறப்பாடு நடைபெற்று வந்தது. விழாவில் 9-ஆம் நாள் நிகழ்ச்சியாக இரவு குதிரை வாகனத்தில் உற்ஸவ மூர்த்தி வேடபரி சென்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று 10-ஆம் நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது. 15 கிராமங்களிலிருந்து தாரைத்தப்பட்டைகளுடன் தண்ணீர் தோப்பரையில். புனித நீரை முக்கியஸ்தர்கள் ஆலயம் எடுத்து வந்தனர். பின் அங்கிருந்து தேரடிக்கு சென்று தேர் காலில் புனித நீர் ஊற்றப்பட்டது. மருங்காபுரி ஜமீன்தாரும், பரம்பரை அறங்காவலருமான T.ரெங்ககிருஷ்ண குமார விஜய பூச்சய நாயக்கர் தலைமையில் சிறப்பு வழிபாட்டிற்கு பின் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். ஊரின் முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்று மீண்டும் தேர் நிலையடைந்தது. தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.





