பழம்பெரும் கர்நாடக இசைப் பாடகர் டி.வி. சங்கரநாராயணன் தமது 77வது வயதில் சென்னையில் செப்.2 வெள்ளிக்கிழமை மாலை காலமானார்.
மதுரை மணி ஐயர் பாணியில் கர்நாடக இசையின் ஒளியைப் பரப்பியவராகக் கருதப்படுபவர் டி.வி.சங்கரநாராயணன். தமது எட்டாம் வயதில் பாடத் தொடங்கிய இவர், அந்தச் சிறு வயதில் இருந்தே மதுரை மணி ஐயருடன் பாடி வந்தார். தமது இசைப் பணிக்காக, 2003 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதை வென்றவர் டி.வி. சங்கரநாராயணன்.
77 வயதான அவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். டி.வி.சங்கரநாராயணன், மணி ஐயரின் மருமகனும், டி.எஸ். வேம்பு அய்யரின் மகனுமாவார். இவர், மதுரை மணி அய்யரின் இறுதிக் காலம் வரை மேடையில் உடன் இருந்தவர்.
இரண்டாம் உலகப் போரின்போது சென்னை நகரில் இருந்து பெரும்பாலானவர்கள் வெளியேறிய போது, மதுரை மணி ஐயர் குடும்பமும் அவ்வாறு தெற்கு நோக்கிக் குடி பெயர்ந்தது. அதனால், 1945 இல் மயிலாடுதுறையில் பிறந்தார் சங்கரநாராயணன்.
1950 களில் அவர்களின் குடும்பம் சென்னைக்குத் திரும்பியது. டி.வி.சங்கரநாராயணன் சட்டம் பயின்றார், இருப்பினும் அவர் இசைத் துறையையே தனது முழுநேர வாழ்க்கையாகத் தேர்ந்தெடுத்தார்.
சங்கரநாராயணனின் மகன் மகாதேவன் அவரைப் பற்றிக் குறிப்பிட்ட போது, “என் அப்பாவும் மணி ஐயருடன் ஒன்பது வயதிலிருந்தே உடன் வரத் தொடங்கினார். அவர் 2003ல் மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதைப் பெற்றார். அதே ஆண்டில், மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கியது.” என்றார்.