
தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ்., அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்துார் உள்ளிட்ட ஒன்பது நகரங்களில், ஆர்எஸ்எஸ்., இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி, டிஜிபி.,யிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் மனுவின் மீது எந்த முடிவும் எடுக்காததால், அனுமதி அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒன்பது இடங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில், ‘மற்ற மாநிலங்களில் ஆர்எஸ்எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இங்கு மட்டும் அனுமதி மறுக்கப் படுகிறது. ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தவே போலீசுக்கு அதிகாரம் உள்ளது. அனுமதி மறுக்க அதிகாரம் இல்லை’ என்று குறிப்பிடப் பட்டது.
இம்மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ்., அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டார். வரும் செப்டம்பர் 28க்குள் தமிழக போலீஸ் அனுமதி வழங்க வேண்டும், நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.