pm modi in punjab - 2026

நாட்டின் வீரவரலாற்றை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் : பிரதமர் மோடி!

சற்றுமுன் Featured அரசியல் இந்தியா லைஃப் ஸ்டைல்
pm modi in punjab - 2026

”நம் நாட்டின் பெருமைமிக்க, வீரமிக்க வரலாற்றை மறைத்து, நம்மிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி நம்மை அடிமையாக்கி வைத்திருந்தனர் அந்நியர்,” எனப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

சீக்கியர்களின் 10வது குருவான குரு கோவிந்த் சிங்கின் இளம் மகன்கள் ஜோராவர் சிங், பதேஹ் சிங் ஆகியோர், முஸ்லிம் மதத்துக்கு மாற மறுத்ததால் முகலாய அரசர் அவுரங்கசீப்பால் கொல்லப்பட்டனர்.

இவர்களுடைய வீர வரலாறு வெளியுலகுக்கு தெரியும் வகையில், டிச.,26ம் தேதி, ‘வீர் பால் திவஸ்’ எனப்படும் இளம் வீரர்கள் தினமாக கொண்டாடப்படும் என, ஜன., 9ல் நடந்த குரு கோவிந்த் சிங் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

இதன்படி, முதல் வீர் பால் திவஸ் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில், 300 இளம் கலைஞர்கள் சீக்கிய பாடல்களை பாடினர். மேலும், 3000 குழந்தைகள் பங்கேற்கும் பேரணியும் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

குரு கோவிந்த் சிங்கின் நான்கு மகன்களில் இருவர், போரில் உயிரிழந்தனர். மற்ற இரு மகன்கள், மதத்தை காப்பாற்றும் முயற்சியில் கொல்லப்பட்டனர். மிகவும் வலிமையாக இருந்த முகலாய அரசர் அவுரங்கசீப் வாளைக் காட்டி மிரட்டிய போதும், மதம் மாறமுடியாது என, அவர்கள் உறுதியாக நின்றனர்.

அந்த இளம் வயதிலும் ஜோராவர் சிங், பதேஹ் சிங் மிகவும் தைரியத்துடனும், மன உறுதியுடனும் இருந்தனர். நம் நாட்டில் இதுபோன்ற பெருமை மிக்க, வீரமிக்க பல வரலாறுகள் வெளியுலகுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளன.

சுயபச்சாதாபம், தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் வகையிலான வரலாற்றை அந்நியர் நம் மீது திணித்தனர். அந்த குறுகிய பார்வைகளில் இருந்து நாம் வெளியேற வேண்டும். நம் நாட்டின் வீரமிக்க வரலாற்றை மக்களுக்கு, குறிப்பாக நம் இளைஞர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இது அவர்களுக்கு நம் நாட்டின் பெருமையை தெரிந்து கொள்வதுடன், எதிர்கால வாழ்க்கைக்கு ஊக்கமாகவும் அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.