
பொங்கல் பரிசு தொகுப்புடன் முழு கரும்பு வழங்கிட தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. முன்னதாக வரும் 2023 தைப்பொங்கல் திருநாளில் ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கு அரிசி சர்க்கரை 1000 ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை வழங்க தமிழக அரசின் சார்பில் ஆணை வெளியிடப்பட்டிருந்தது. இதனால் கரும்பு விவசாயிகள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். பொங்கல் பண்டிகைக்காகவே விவசாயிகள் கரும்பு விளைவித்திருந்தனர் இதில் வாங்காமல் போனால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்ததுடன் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு ஆதரவாக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கைகள் வெளியிட்டனர்.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் முழு கரும்பு வழங்குவதாக தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது இது குறித்த செய்தி வெளியீடு….
செய்தி வெளியீடு
நாள்: 28-12-2022
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பினையும் சேர்த்து வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பினையும் சேர்த்து வழங்கிட விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றது குறித்து, இன்று (28-12-2022) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், முழுக் கரும்பு ஒன்றினையும் சேர்த்து, அனைத்து அரிசி குடுப்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
இதனடிப்படையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினை 2-1-2023-க்கு பதிலாக 9-1-2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைப்பார்கள்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் கொடுக்கும் பணி 3-1-2023 முதல் 8-1-2023 வரை நடைபெறும்.
இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. கே.ஆர். பெரியகருப்பன், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் திரு. ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப. வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைச் செயலாளர் திரு. சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





