
பொங்கல் பூ சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.6200-க்கு விற்பனை ஆனது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பல்வேறு வகையான மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதில் அதிக அளவில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் மல்லிகைப்பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதிகாலை நேரத்தில் விவசாயிகள் மல்லிகைப்பூக்களைபறித்து விற்பனைக்காக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு கொண்டுவருவார்கள். அங்கு ஏலம் முறையில் பூக்கள் விற்பனை நடைபெறும். இந்த சந்தையில் மல்லிகைப்பூக்களை ஏலம் எடுக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வருவார்கள்.
மேலும் இந்த மார்க்கெட்டில் இருந்து கேரளாவுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு சீசன் காலங்களில் சுமார் 3 முதல் 5 டன் வரை மல்லிகைப்பூக்கள் கொண்டு வரப்படும். ஆனால் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் மல்லிகைப்பூக்கள் செடியிலேயே கருகி வருகிறது. இதனால் பூ உற்பத்தி குறைந்து விட்டது. இன்று சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு குறைந்த அளவிலேயே மல்லிகைப்பூக்கள் கொண்டு வரப்பட்டது.
மேலும் தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் மல்லிகைப்பூக்கள் தேவை அதிகரித்து உள்ளது. பூக்கள் வரத்து குறைந்து தேவை அதிகரித்து உள்ளதால் இன்று நடந்த பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.6200-க்கு விற்பனை ஆனது.





