56 ஆயிரம் ஹெல்மெட் இலவசமாக வழங்கிய ‘ஹெல்மெட் மனிதர்’..

Published:

973621 - 2026
56ஆயிரம் பேருக்கு ஹெல்மெட்டுகளை இலவசமாக வழங்கிய ‘ஹெல்மெட் மனிதர்’-

56ஆயிரம் பேருக்கு ஹெல்மெட்டுகளை இலவசமாக வழங்கிய ‘ஹெல்மெட் மனிதர்’- இதுவரை ரூ.2 கோடி செலவு செய்துள்ளார் .

‘இந்தியாவின் ஹெல்மெட் மனிதர்’ எனப்படும் ராகவேந்திர குமார் ( 36) இதுவரை 56 ஆயிரம் பேருக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கியுள்ளார்.

ராகவேந்திரகுமார் பீகார் மாநிலம் மதுபானி பகுதியை சேர்ந்தவர். இவர் இளம்வயதில் தனது நண்பர் கிருஷ்ணகுமார் என்பவருடன் நொய்டாவில் தங்கி படித்தார். கடந்த 2014-ம் ஆண்டு அங்குள்ள யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற கிருஷ்ணகுமார் டேங்கர் லாரி மோதி படுகாயம் அடைந்தார். அவர் ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கிருஷ்ணகுமாரின் சிகிச்சைக்கு நிறைய பணம் தேவைப்பட்டது.

இதையடுத்து ராகவேந்திரகுமாரும், அவரது நண்பர்களும் ரூ.20 லட்சம் நிதி திரட்டி சிகிச்சைக்கு செலவு செய்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் கிருஷ்ணகுமார் இறந்தார். கிருஷ்ணகுமாரின் மரணம் ராகவேந்திரகுமாரை வெகுவாக பாதித்தது. கிருஷ்ணகுமார் போல ஹெல்மெட் அணியாமல் யாரும் மரணம் அடையக்கூடாது என்பதற்காக ராகவேந்திரகுமார், யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்க தொடங்கினார்.

இது தொடர்பாக ராகவேந்திரகுமார் கூறியதாவது:- எனது நண்பர் கிருஷ்ணகுமார் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி இறந்தது என்னை வெகுவாக பாதித்தது. சட்டப்படிப்பை முடித்த பிறகு எனக்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. மேலும் பங்கு சந்தை வர்த்தகத்திலும் ஈடுபட்டேன். இதனால் போதிய அளவுக்கு பணம் கிடைத்தது. எனவே அந்த பணத்தில் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்க முடிவு செய்தேன்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஒரு கடைக்கு சென்று அங்கிருந்து ஹெல்மெட்டுகள் அனைத்தையும் வாங்கினேன். யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற அனைவருக்கும் ஹெல்மெட்டுகளை இலவசமாக வழங்கினேன்.

எனது சேவை பற்றி அறிந்த பீகார் அரசு ‘இந்தியாவின் ஹெல்மெட் மனிதர்’ என்ற பட்டத்தை எனக்கு வழங்கியது. மேலும் எனது சேவையை உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் அரசுகள் பாராட்டின. மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி, நடிகர் சோனு சூட் உள்ளிட்ட பலர் என்னை நேரில் அழைத்து பாராட்டினார்கள்.

சமூக வலைதளங்களிலும் ஆயிரக்கணக்கானோர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதுவரை ரூ.2 கோடி செலவில் 56 ஆயிரம் ஹெல்மெட்டுகளை வாங்கி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக வழங்கி உள்ளேன். ஒரு கட்டத்தில் ஹெல்மெட் வாங்க என்னிடம் பணம் இல்லை.

அப்போது எனது மனைவியின் நகைகளை அடகு வைத்து ஹெல்மெட்டுகளை வாங்கி இலவசமாக வழங்கினேன். நொய்டாவில் உள்ள எனது வீட்டையும் ரூ.52 லட்சத்துக்கு விற்று ஹெல்மெட்டுகளை வாங்கி கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img