

அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு சுவாமி கள்ளழகர் புறப்பட்டார்.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழியனுப்பி வைத்தனர்.
திருமாலிருஞ்சோலை எனப்படும் அழகர்மலையில் நூபுரகங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. அங்கு பெருமாளின் தரிசனம் வேண்டி சுபதரஸ் என்ற முனிவர் தவம் இருந்தார். அங்கு வந்த துர்வாச முனிவர், தன்னை வணங்காமல் தியானத்தில் மூழ்கி இருந்த சுபதரஸ் முனிவரை மண்டூகமாக (தவளை) மாற சாபமிட்டார்.
அதிர்ச்சி அடைந்த சுபதரஸ் சாப விமோசனம் கேட்டார். வைகை கரையில் தவமிருந்தால் பெருமாள் கருட வாகனத்தில் வந்து சாப விமோசனம் தருவார் என துர்வாசர் கூறினார்.
அதன்படி வைகைக் கரையில் மண்டூகமாக இருந்த முனிவருக்கு சித்திரை பெளர்ணமி நாளில் சாப விமோசனம் கிடைத்தது. இந்த உற்சவம்தான் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு. அழகர்கோவிலில் சித்திரை திருவிழா மே 1-ம் தேதி தொடங்கியது. 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இன்று (3-ம் தேதி) மாலை 6 மணிக்கு அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு சுவாமி கள்ளழகர் புறப்படுகிறார். 4-ம் தேதி எதிர்சேவை, 5-ம் தேதி அதிகாலை வைகையாற்றில் கள்ளழகர் இறங்கி, மண்டூக முனிவருக்கு சாப விமோச்சனம் அளிக்கிறார்.

மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 20ம் தேதி முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு மே 5ம் தேதி நடைபெறுகிறது. ஆற்றில் இறங்கும் கள்ளழகர் சூடிக்கொள்ள ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை, கிளி, பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்களப் பொருட்கள் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இருந்து மதுரைக்கு அனுப்பும் நிகழ்வு விமரிசையாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.மதுரை வந்த இந்த மாலை வஸ்திரங்கள் போன்றவற்றை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.





