
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலை கிளி பட்டு வஸ்திரம் மதுரை கள்ளழகருக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்கொடி என அழைக்கப்படுவார். ஆண்டுதோறும் ஆண்டாள் சூடிக்கலைந்த மாலை கிளி வஸ்திரம் போன்ற மங்களப் பொருட்கள் புரட்டாசி மாதம் பிரமோற்சவம் கருட சேவையின் போது திருப்பதி திருமலை பெருமாளுக்கும் பங்குனி மாதம் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் தேரோட்டத்தின் போது ஸ்ரீரங்க பெருமாள் அணிவதற்கும் மதுரையில் சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி அன்று வைகை ஆற்றில் தங்கக் குதிரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் கள்ளழகர் அணிவதற்கும் கொண்டு செல்லப்படும்.

இந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் போது அழகர் கோவில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் சித்ரா பௌர்ணமி அன்று இறங்கும் போது அணிவதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கலைந்த பல வண்ண மலர்மாலை கை கிளி பட்டு வஸ்திரம் ஆகிய மங்களப் பொருட்கள் மதுரைக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று 3 ந் தேதி சிறப்பாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் பூஜைகள் நடத்தப்பட்டு பிரம்மாண்டமாக கட்டப்பட்ட மலர்மாலை சாத்தப்பட்டது. கோவில் அர்ச்சகர் ராஜூ பட்டர் பூஜைகளை செய்து வைத்தார்.
தொடர்ந்து மங்களப் பொருட்களை மதுரைக்கு கொண்டு செல்லும் ஆண்டாள் கோவில் அர்ச்சகர் கிச்சப்பன் மேள தாளம் முழங்க ஊர்வலமாக தலையில் சுமந்து மாட வீதிகள் வழியே கொண்டுவந்து கார் மூலம் மதுரைக்கு கொண்டு சென்றார்.
இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் முத்துராஜா ஸ்தானிகம் ரங்கராஜன் என்ற ரமேஷ் கோவில் மணியம் கோபி வேதபிரான் சுதர்சன் வெங்கடேஷ் ஐயங்கார் மற்றும் ஏராளமான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து செல்லும் மாலை கிளி ஆகிய மங்களப் பொருட்கள் மே 4 தேதி மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு செல்லும்.
அங்கு கள்ளழகர் எதிர் சேவை முடிவின்போது அதிகாலை ஆண்டாளின் மங்களப் பொருட்கள் கள்ளழகருக்கு சாத்தப்படும். அதனை அணிந்த கள்ளழகர் தல்லாகுளத்தில் இருந்து மக்கள் வெள்ளத்தில் புறப்பட்டு பல்வேறு மண்டக படிகளுக்கு சென்று 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதுரை வைகை ஆற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இறங்கி அருள் பாலிக்கிறார்.
ஆண்டாளின் மங்களப் பொருட்கள் மதுரைக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன் கோவில் செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் கோவில் அலுவலர்களும் திருக்கோவில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.





