Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeசற்றுமுன்திருச்செந்தூர் பால்குட விவகாரம்: பக்தர்களுக்குத்தான் இறைவனும் கோயிலும்! அரசுக்கு அல்ல!

திருச்செந்தூர் பால்குட விவகாரம்: பக்தர்களுக்குத்தான் இறைவனும் கோயிலும்! அரசுக்கு அல்ல!

திருசெந்தூர் ஆலயத்தில் பக்தர்களின் பால்குடம் தடை செய்யபட்டு அந்த பக்தர்கள் பாலை தரையில் கொட்டியது நிச்சயம் பெரும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய ஒன்று!

இது குறித்து இந்து முன்னணி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. அதன் மாநிலத் துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் விடுத்த அறிக்கையில்,

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து பாதயாத்திரை வருவது தொன்று தொட்ட பழக்கம். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சார்ந்த முருக பக்தர்கள் சுமார் 300 பேர் 9 நாட்களாக 250 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாக நடந்து வந்து திருச்செந்தூர் முருகனுக்கு பால்குடம் எடுத்து வந்துள்ளனர். நேற்று கோவிலுக்குள் அவர்கள் தரிசனம் செய்ய வந்தபோது அவர்களை திருக்கோவில் நிர்வாகம் தடுத்து நிறுத்தி உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளது. இது மிகுந்த வேதனைக்குரிய செயலாகும். எவ்வளவு உடல்வேதனை, மனவேதனைகளை தாங்கி கொண்டு முருகனை தரிசிக்க எவ்வளவு கஷ்டப்பட்டு ஆசையோடும், ஆர்வத்தோடும் பக்தர்கள் வந்திருப்பார்கள். அதை கொஞ்சமும் மதிக்காமல் மிருகத்தனமாக தடுத்து நிறுத்தி உள்ளது எந்த உணர்வுள்ள மனிதனும் ஏற்க கூடிய செயல் அல்ல.

பக்தர்களின் வழிபாட்டிற்கு வசதி செய்வதற்கு தான் இந்து சமய அறநிலையத்துறை உள்ளதே தவிர பக்தியோடு பல மைல்தூரம் நடந்து பாதயாத்திரை வரும் பக்தர்களை தடுத்து நிறுத்துவது கண்டனத்திற்குரிய செயலாகும். பணம் கொடுத்தால் தான் கோவிலுக்குள் செல்ல முடியும் என்பது பொருளாதார தீண்டாமை. இதை அரசே செயல்படுத்துவது மிகப்பெரிய கொடுமை. அறநிலையத் துறையின் இந்த சீர்கேடான செயலால் பக்தர்கள் மனம் வேதனை அடைந்து 250 கி.மீ தூரம் பாதயாத்திரையாக நடந்து வந்த பக்தர்கள் பால்குடத்தை பிரகாரத்தில் கொட்டி அறநிலையத்துறைக்கு சாபம் விட்டு சென்றுள்ளனர்.

தமிழக அரசு கோவில்களில் நடத்தும் இந்த கொடுமைகளை எல்லாம் கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். அறநிலையத்துறை அதிகாரிகள் இதன் பாவங்களை நிச்சயமாக அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதை இறை நம்பிக்கை உள்ளவர்கள் அறிவர்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அறங்காவலர் குழு அமைக்கப்பட்டுள்ள போதும் அவர்களுக்கு உரிமைகள் இருக்கிறதா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், காவடி ஏந்தி வரும் பக்தர்கள், வேல் குத்தி வரும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் வழி என போர்டுகள் மட்டுமே உள்ளது ஆனால் அங்கே அனுமதிக்கப்படுவதில்லை.

இது குறித்து அறங்காவலர் குழு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை அறங்காவலர் குழுவை அலங்கார குழுவாக தமிழக அரசு நியமித்து உள்ளதா அதிகாரம் இல்லாத குழுவாக அறங்காவலர் குழு உள்ளதா? இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் திருக்கோவில் பணியாளர்களும் அறங்காவலர் குழுவை மீறி செயல்படுகிறார்கள் அல்லது பக்தர்களின் நலனில் அக்கறை இல்லாமல் அறங்காவலர் குழு செயல்படுகிறதா என்ற கேள்விகளை நேற்று நடந்த சம்பவம் ஏற்படுத்துகிறது.

திருச்செந்தூரில் பாதயாத்திரை, வேல் குத்தி , காவடி , பால்குடம் எடுத்து வரும் பக்தர்களை வரிசையில் பல மணி நேரம் காக்க வைக்காமல் உடனடியாக தரிசனம் செய்வதற்குரிய ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்ய வேண்டும். தேவகோட்டை முருக பக்தர்களை உள்ளே அனுமதிக்காமல் ஏதோ தங்கள் சொந்த குடும்ப கோயில் போல் தடுத்து நிறுத்திய கோவில் பணியாளர்கள் மீது தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சேகர்பாபு ஆகியோர் விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் இந்து முன்னணி சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.. என்று தெரிவித்துள்ளார்.

திருசெந்தூர் ஆலயம் அந்தக் காலம் முதல் ஏராளமான பக்தர்கள் எங்கிருந்தெல்லாமோ வந்து பால்குடம் எடுத்து வணங்கும் ஆலயம். இதனாலே அக்கால மன்னர்கள், தனவான்கள், பக்திமான்களெல்லாம் அன்பர்கள் வந்து தங்கவும் ஓய்வெடுக்கவும் இளைப்பாறவும் பெருமளவில் மண்டபங்களை அமைத்துக் கொடுத்தார்கள்

அங்கே அனைத்து பகுதி மக்களும் வந்து தங்கி வேண்டுதல் செய்வதும் அதை நிறைவேற்றுவதும் மரபு. அப்படிப் பட்ட ஆலயத்தில் பக்தர்கள் பால்குடம் தடை என்பதெல்லாம் ஒருசிறிதும் ஏற்கமுடியாத விஷயம். இந்து அறநிலையத் துறை என்பது ஆலயத்தை நிர்வாகம் செய்ய அமைக்கபட்டதே தவிர வழிபாட்டிலோ பக்தர்களுக்கும் கோவிலுக்குமான பந்தத்தை, வழிபாட்டு மரபைத் தடை செய்யவோ, அதற்கு எள்ளளவும் உரிமை இல்லை. ஆலய வழிபாட்டில் தலையிட, பக்தர்களின் நம்பிக்கையில் தலையிட அதற்கு ஒருசிறிதும் உரிமை இல்லை அதிகாரமுமில்லை என்பது பல்வேறு சமயங்களில் நீதிமன்றத் தீர்ப்புகளில் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. அப்படி இருந்தும் இப்படி பக்தர்கள் மனம் புண்பட அராஜகம் செய்திருக்கின்றார்கள் என்றால் இது கண்டிக்கதக்கது. அது மட்டுமல்ல, நீதிமன்ற அவமதிப்பும் கூட!

அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தபட்ட அதிகாரியினை அப்புறபடுத்துதல் அவசியமான ஒன்று. இந்து ஆலயங்களை இந்துக்களிடமே ஒப்படைத்தல் என்பதே சரி, அதுவரை குறைந்தபட்சம் இந்த மதுகடை, ரேஷன்கடை போல் அல்லாமல் புனிதமான ஆலயங்களை அதனதன் மரபில் ஆன்றோரையும் நல்ல துறவிகளையும் கொண்டு நிர்வகித்தலே சரி.

இந்து ஆலயங்கள் எவ்வளவு பாழ்பட்டுக் கிடக்கின்றன என்பதற்கு இந்தக் காட்சியே சாட்சி என்றாலும் இன்னும் மிக வலியான காட்சிகள் உண்டு. நெல்லை ஆலயத்தில் அதன் மண்டபம் கட்டிய நின்றசீர் நெடுமாற நாயனார் பெயர் இல்லை, அவர் சிலை கரிபிடித்து அடையாளமற்றுக் கிடக்கின்றது! அதை மேம்படுத்திய ஜடாவர்மன் சிலை அடையாளமற்றுப் போயிற்று.

திருவாரூர் ஆலயத்தின் தேவாசிரியர் மண்டபம் சுமார் 10 நாயன்மார்களுடன் தொடர்புடையது. நாயன்மார்கள் அமர்ந்திருந்த இடம் அது. அவர்களின் பக்தி மெய்பிக்கபட்ட இடம் அது. திருத்தொண்டர் தொகை எனும் நாயன்மார் வரலாறு அங்கிருந்துதான் தொடங்கப்பட்டது. அப்படிப்பட்ட புனிதமான இடத்தை ஏதோ தீவிரவாத தாக்குதல் பகுதி போல, அணுகதிர்வீச்சு இடம் போல வேலியிட்டு அடைத்து வைத்திருப்பதெல்லாம் எந்த இந்துவாலும் ஏற்றுக் கொள்ளமுடியாத விஷயம்.

இந்து ஆலயங்களை அறநிலையத் துறை என்ற பெயரில் எடுத்தது ஒரு யானையினை மெல்ல வதைத்து பட்டினி போட்டுக் கொல்லும் தந்திரமன்றி வேறல்ல. யானை சாகுமுன் காக்க வேண்டியது அவரவர் கடமை.

திருசெந்தூர் ஆலயம் துக்ளக் காலத்திலும் டச்சுக்காரர் காலத்திலும் மாபெரும் அலங்கோலப் பட்டது. அதே சீரழிவினை திராவிட மாடல் ஆட்சி தருகின்றது. காலம் இதை சரிசெய்யும்.

“தெய்வம் நின்று கொல்லும்”.