தனியார் மதுக் கூடங்களுக்கு லைசன்ஸ் வழங்கிவிட்டு அந்த தனியார் கடைகளுக்கு பாதிப்பு வரக்கூடிய 500 அரசு மது கடைகளை மட்டும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.! என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் – டாக்டர் கிருஷ்ணசாமி @DrKrishnasamy கூறியுள்ளார்.
2000 தனியார் கடைகளுக்கு அனுமதி கொடுத்து விட்டு, அந்தக் கடைகளால் பாதிப்பு வரக்கூடிய 500 அரசின் கடைகளை மூடுகிறார்கள். மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் தனியார் கடைகள் மூலம் லாபம் செழிக்க வைத்து, அவற்றால் பாதிப்பு வரக்கூடிய அரசின் டாஸ்மாக் கடைகள் மற்றும் லாபம் இல்லாத அரசின் கடைகளை மூடுகிறார்கள் என்று செய்தியாளர்களிடம் பேசியபோது டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
தமிழகம் முழுதும் இன்று முதல் முதல்வரின் உத்தரவுப்படி 500 மதுக்கடைகள் மூடப்படுகின்றன. கடந்த சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் உள்துறை சார்பில் இதற்கான அரசாணை கடந்த ஏப்ரல் 20ம் தேதி வெளியிடப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளைக் கண்டறிந்து, அவற்றை ஜூன் 22ஆம் தேதி முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் பட்டியலும் வெளியிடப்பட்டது. மண்டல மேலாளர்கள் பரிந்துரைப்படி குறைந்த வருவாய், குறைந்த இடைவெளி, வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில், நீதிமன்ற உத்தரவு, நீண்ட நாளாக பொதுமக்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் என 500 கடைகள் தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கடைகள் அனைத்தும் ஜூன் 22ம் தேதி இன்று முதல் மூடப்படுகிறது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையை புதிய தமிழகம் கட்சி விமர்சனம் செய்துள்ளது. தமிழக அரசின் நடவடிக்கை உள்நோக்கம் வாய்ந்தது என்று கூறினார் அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் விமர்சனம் செய்துள்ள டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி, “இரண்டாயிரம் மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளித்துவிட்டு, நிதிநிலை அறிக்கையில் 43,000 கோடியாக இருந்த மது விற்பனை லாபம் அடுத்த ஆண்டு 52,000 கோடியாக உயரும் என அறிவித்துவிட்டு, 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக நாடகமாடுறிது திமுக!” என விமர்சித்துள்ளார்.