
ஆடி-18, ஆடிப்பெருக்கு நாளை முன்னிட்டு, விஸ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாட்டில், திருநெல்வேலி தாமிரபரணிக் கரையோரத்தில் பெண்கள் வியாழக்கிழமை சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் காவிரி பாய்ந்தோடும் கொங்கு, டெல்டா மாவட்டங்களில் ஆடிப் பெருக்கு விழா ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தென் மேற்கு பருவமழையின் தீவிரத்தால் புது வெள்ளம் பொங்கி வரும் ஆடிப்பெருக்கு நாளில் நெல், கரும்பு, காய்கனி விதைப்பு பணிகளை விவசாயிகள் தொடங்கி வழிபாடுகளை மேற்கொண்டனர். வளம் தரும் நதியின் கரையில் திரண்டு வழிபாடுகளையும் நடத்தினர்.

அவ்வகையில், ஆடிப்பெருக்கு விழாவையொட்டி திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரபரணிக் கரையோரம் பெண்கள் சீர்வரிசைப் பொருள்களை நதிக்கு படைத்து வியாழக்கிழமை வழிபாடு செய்தனர். சிலர் பொங்கலிட்டும் வழிபாடு நடத்தினர். பின்னர் பெண்கள் தங்கள் கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி இறைவனைப் பிரார்த்தித்து புதிய மஞ்சள் கயிறுகளை அணிந்து கொண்டனர்.

இதுகுறித்து பெண்கள் குறிப்பிட்டபோது, காவிரிக் கரையில்தான் ஆடிப்பெருக்கு மிகவும் பிரபலம். ஆனால், அனைத்து நதிகளும் கடலில் சங்கமிக்கின்றன என்ற ஐதீகத்தில் அனைத்து நதிக்கரைகளிலும் ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
விரதமிருந்து வந்த பெண்கள் தாமிரபரணியில் குளித்து மஞ்சள் கயிறு அணிந்து வழிபட்டனர். காயத்ரி மந்திரம், சுமங்கலி பூஜை மந்திரங்கள், திருமுறை உள்ளிட்டவற்றை பாடலாகப் பாடியும் வழிபட்டனர் என்றனர். இதேபோல, கருப்பந்துறை, மணிமூர்த்தீஸ்வரம், அருகன்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தாமிரவருணி அன்னைக்கு 108 சீர் வரிசை : ஆடி 18ம் பெருக்கை முன்னிட்டு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் திருநெல்வேலி சந்திப்பு சிருங்கேரி சாரதா மண்டபத்திலிருந்து 108 சீர்வரிசைகள் முக்கிய வீதிகளின் வழியாக எடுத்து வரப்பட்டு தைப்பூச மண்டபம் முன் தாமிரபரணியாற்றில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீப ஆரத்தி நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணைச் செயலர் காளியப் பன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் மருத்துவர் பத்மாவதி மகாரா ஜன் முன்னிலை வகித்தார். இதில், விஸ்வ ஹிந்து பரிஷத் கோட்ட இணைச் செயலர் முத்துக்குமார், மாவட்டச் செயலர் ஆவுடையப்பன், மாவட்ட அமைப்பாளர் இசக்கி, குருசாமி, சங்கர். மாவட்டத் தலைவர் புலிதுரை, மாவட்ட துணைச்செயலர்கள் சிவா.ரமேஷ், வெங்கடேஷ், பாஜக., தென்காசி மாவட்டப் பொறுப்பாளர் மகாராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்
இதனையடுத்து தாமிரபரணி தாய்க்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்து, பக்தர்கள் ஜெய் தாமிரபரணி என்ற மந்திரம் முழங்க தாமிரபரணியை ஒரு கர்ப்பிணிபோல் பாவித்து கருப்பு வளையல், கருகுமணி போன்ற சீர்வரிசைப் பொருட்களை தாமிரபரணித் தாய்க்கு படைத்தனர்.
இதேபோல், மதுரை வைகை ஆற்றில் ஆடிப்பெருக்கு தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் எம்.ராஜன் தலைமை வகித்தார். கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ் ஸ்வாமிகள் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ”சுத்தம் தான் கடவுள், இயற்கைதான் இறைவன். வைகை ஆரத்தியோடு மட்டுமில்லாமல் வைகை ஆற்று சுத்தத்தை அந்த சொக்கநாதர், மீனாட்சிக்கு செய்யும் சேவையாக ஆற்ற வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில் குபேந்திர பட்டர் குழுவினர் வைகையில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதியில் தீபாராதனை காட்டினர். நிகழ்ச்சியின் இறுதியில் சுமங்கலி பெண்களுக்கு மங்கல பொருட்களை வழங்கினர்.