
கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை நுகா்வோா் விரும்பவில்லை என ஆவின் நிறுவனம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெகிழிப் பொருள்களுக்கான தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய வழக்குகளை விசாரித்து வரும் சென்னை உயா்நீதிமன்றம், ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பதற்கு பதில் கண்ணாடி பாட்டிலில் அடைத்து விற்றால் நெகிழியின் பயன்பாடு தவிா்க்கப்படும் என கூறியிருந்தது.
மேலும், பாட்டிலில் அடைத்து விற்க முடியுமா? என ‘சா்வே’ நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த சா்வேயில், சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள திருமங்கலம் சாலை, குமாரசாமி நகா், திருநகா் மற்றும் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளைச் சோ்ந்த நுகா்வோா், பாட்டிலில் பால் விற்பனை செய்யும்போது விலை அதிகமாக இருக்கும். எனவே, நெகிழி உறைகளிலேயே தொடர விரும்புவதாக மக்கள் தெரிவித்துள்ளனா்.
எனவே, நுகா்வோரின் விருப்பத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து, நீதிமன்றம் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கின் விசாரணையை அக்டோபா் 9-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

முன்னதாக, “கண்ணாடி பாட்டிலில் பால்”, உயர்நீதிமன்றத்தை ஏமாற்றுகிறதா..? ஆவின் நிர்வாகம்.” என்று கேள்வி எழுப்பி, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ பொன்னுசாமி அறிக்கை வெளியிட்டார். அவரது அறிக்கையில்,
“மதுபானங்களை பாட்டிலில் விற்பனை செய்யும் போது ஆவின் பாலினை பாட்டிலில் விற்பனை செய்ய முடியாதா..?”, “மது போதையில் பாட்டிலை கவனமாக கையாளும் போது, சுயநினைவு உள்ள மக்களால் பாட்டிலை கையாள முடியாதா..?” என கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் “ஆவின் பாலினை நெகிழி உறைகளுக்குப் பதிலாக கண்ணாடி குடுவையில் ஏன் விற்பனை செய்யக் கூடாது..?” எனவும் கேள்வி எழுப்பி அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில் நேற்றைய (21.09.2023) தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆவின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் நகைப்பிற்குரியதாகவும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உள்ளபடியே கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆவின் நிர்வாகம் செயலாற்றியதா..? என்கிற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
ஏனெனில் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை கண்ணாடி பாட்டிலில் விற்பனை செய்வது தொடர்பாக தமிழகத்தில் சுமார் 7.5கோடி மக்கள் வாழும் 38மாவட்டங்களில் உள்ள மக்களிடமிருந்து கருத்துக்களை கேட்காமல், வெறும் 2மாவட்டங்களில் குறிப்பாக சென்னையில் ஒரே பகுதியில் (வில்லிவாக்கம்) 5இடங்களிலும், கோவை மாவட்டத்தில் 2இடங்களிலும் என மொத்தம் 7இடங்களில் மட்டும் அது தொடர்பாக “சர்வே என்கிற பெயரில் நாடகம்” நடத்தி விட்டு, அதனடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கும் ஆவின் நிர்வாகத்தை நினைத்து அழுவதா..? இல்லை தமிழக அரசின் செயலை நினைத்து சிரிப்பதா..? என தெரியவில்லை.
நெகிழி பயன்பாட்டை குறைக்க பால் உற்பத்தி, விநியோகம், விற்பனை என நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள ஒரு விசயத்திற்கு மாற்றம் கொண்டு வர வேண்டும் என்கிற “நல்லெண்ண (???) அடிப்படையில், மது விற்பனையை உதாரணமாக” கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் போது, 24மணி நேரமும் குளிர்சாதன பெட்டியில் வைக்காமல் விற்பனை செய்யும், “உயிருக்கு தீங்கிழைக்கும் மது விற்பனையோடு”, சில மணி நேரத்திற்குள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பராமரிக்காவிட்டாலும் கெட்டுப் போகும், “அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விற்பனையை ஒப்பிடுவது ஏற்புடையதல்ல” என்பதையும்,
தமிழகத்தில் தினசரி 84% விற்பனையாகும் தனியார் பால் நிறுவனங்களையுமா பாட்டிலில் பால் விற்பனை செய்ய குறிப்பிடாமல், 16% மட்டுமே விற்பனையாகும் “அரசின் கூட்டுறவு பால் நிறுவனத்தை மட்டும் பாட்டிலில் பால் விற்பனை செய்யச் சொல்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றோ அல்லது “தனியார் பால் நிறுவனங்களையும் இவ்வழக்கில் பிரதிவாதியாக சேர்க்க வேண்டும்” என்றோ நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யாதது ஆவின் நிர்வாகத்தின் மீது அவநம்பிக்கையையே ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நெகிழி உறைகளுக்குப் பதிலாக கண்ணாடி பாட்டிலில் பாலினை அடைத்து விற்பனை செய்வதில் உள்ள அனைத்து விதமான பிரச்சினைகள், அதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து அது தொடர்பான வல்லுனர்களின் கருத்துக்களோடு, பால் முகவர்கள், சில்லரை வணிகர்கள், நுகர்வோர் என அவரவர் தொடர்புடைய சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு குழு அமைத்து அவர்களிடம் இருந்தும் முழுமையான அறிக்கையை பெற்று அவற்றோடு, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி, அதில் பெறப்பட்ட மக்களின் கருத்துக்களோடு அனைத்தையும் இணைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தால் ஆவின் நிர்வாகத்தின் வாதம் ஏற்புடையதாக இருந்திருக்கும்.
குறிப்பாக கண்ணாடி பாட்டிலில் பாலினை அடைத்து விற்பனை செய்வதை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் தற்போதுள்ள தொழிற்சாலை கட்டமைப்புகளை மாற்றி விட்டு, கண்ணாடி குடுவையில் அடைத்து உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலை கட்டமைப்புகளை உருவாக்குதல், அதற்கான புதிய கட்டமைப்புகளை உருவாக்க அல்லது மாற்றியமைக்க இணையம் மற்றும் ஒன்றியங்களில் ஏற்படும் செலவுகள், பால் பண்ணைகளில் உற்பத்தி செய்து அதனை வாகனங்கள் மூலம் விநியோகத்திற்கு அனுப்புவதில் உள்ள சிரமங்கள்,
பால் முகவர்கள் வாயிலாக நுகர்வோருக்கு சென்று சேரும் வரை பால் கெட்டுப் போகாமல் இருக்க கூடிய வகையில் குளிர்நிலையை பராமரிப்பதிலும், விநியோகம் செய்த பின்னர் நுகர்வோர் பயன்படுத்திய காலி கண்ணாடி குடுவைகளை திரும்பப் பெற்று பால் பண்ணைகளுக்கு கொண்டு வந்து, மறு சுழற்சி முறையில், சுத்தம் செய்து அதனை பயன்படுத்துவதிலும், கண்ணாடி குடுவைகளை கையாள்வதிலும், அதிகாலை முதல் நள்ளிரவு வரை பால் தட்டுப்பாடின்றி கிடைக்க பால் முகவர்கள் மற்றும் சில்லரை வணிகர்கள் தங்களின் கடைகளில் குளிர்சாதன பெட்டிகளில் தேவையான அளவு இருப்பு வைப்பதிலும் உள்ள நடைமுறை சிக்கல்கள், பராமரிப்பு செலவினங்கள், கள யதார்த்தம் என இவற்றில் எதையுமே அந்த அறிக்கையில் குறிப்பிடாமல், வெறும் இரண்டு மாவட்டங்களில், 7இடங்களில் மக்களிடம் சர்வே நடத்தி விட்டு “நெகிழி உறைகளுக்குப் பதிலாக கண்ணாடி குடுவையில் அடைத்து விற்பனை செய்தால் விற்பனை விலை அதிகமாகும், அதனால் அது எங்களுக்கு வேண்டாம்” என பொதுமக்கள் கருத்துக்களை தெரிவித்திருப்பதாக கூறி, “பொதுமக்கள் மீது பழியை சுமத்தி”, பொதுமக்களின் கருத்துக்கள் அடிப்படையில் பரிசீலித்து உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை முன் வைத்து ஆவின் நிர்வாக இயக்குனர் அவர்கள் தரப்பில் இருந்து அறிக்கை தாக்கல் செய்திருப்பது சரியான அணுகுமுறையாக தெரியவில்லை.
எனவே தற்போது உயர்நீதிமன்றத்தில் ஆவின் நிர்வாக இயக்குனர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, கண்டிப்பதற்கு முன் பால் முகவர்கள் சங்கம், வணிகர்கள் சங்கம், நுகர்வோர் சங்கம் என முத்தரப்பு சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினை அமைத்து அவர்களிடம் இருந்தும், பால் உற்பத்தி, விநியோகம், விற்பனை சார்ந்த வல்லுனர்களிடமிருந்தும் நெகிழிக்கு மாற்றாக கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வது தொடர்பாக விரிவான அறிக்கை பெற்று அதனோடு, மேற்சொன்ன இதர விசயங்களோடும் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும் என ஆவின் நிர்வாகத்தையும், தமிழக அரசையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். – என்று தெரிவித்திருந்தார்.