தமிழக சட்டமன்றத்தில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது நிதிநிலை அறிக்கையினை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
சட்டசபையில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்தார். அதற்கான லோகோவை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதில், “தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி..” என்ற தலைப்பில் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவு பெற்றது. நாளை காலை மீண்டும் சட்டசபை கூடும் என சபாநாயகர் அறிவித்தார்.
பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த முக்கிய அம்சங்கள்…
இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரம் கொண்டது தமிழ்நாடு. தமிழக அரசின் நலத் திட்டங்கள் தமிழர்களை தலை நிமிரச் செய்தன. நீதிக்கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்ட மேட்டூர் நீர்த்தேக்கத்தால் டெல்டா மாவட்டங்கள் பயனடைகின்றன. சர் பி.டி.தியாகராயரால் உருவாக்கப்பட்ட மதிய உணவு திட்டம் பின்னாட்களில் விரிவாக்கப்பட்டது.
100 ஆண்டுகளில் பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட் தமிழர்களின் வாழ்வை தலைநிமிர்த்தியது. கலைஞர் கொண்டு வந்த ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் மகத்தான திட்டமாக அமைந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத்தொகை திட்டங்கள் ஆகியவை மகத்தான திட்டங்கள் ஆகும்.
பேரறிஞர் அண்ணாவின் சொல்லோவியம்தான் நிதி நிலை அறிக்கையை தயாரிக்க உதவியது. கருணையும், நிதியும் ஒன்றாக சேரும்போது தமிழர்களின் வாழ்வு தலைநிமிர்கிறது. கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு ஓராண்டில் ரூ. 7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.
கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடக்கிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றை 25 மொழிகளில் மொழி பெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ் இலக்கிய படைப்புகளை உலகம் முழுவதும் எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், நூலகங்களில் தமிழ் நூல்களை இடம் பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் 3 ஆண்டுகளில் 600 நூல்கள் வெளியிடப்படும். மொழித் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கீழடி உள்ளிட்டவை போன்றே மேலும் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும். இதற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அகழாய்வுக்கு அதிகபட்ச தொகை ஒதுக்கும் மாநிலம் தமிழ்நாடு மட்டுமே.
மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள் 100 பல்கலைக்கழகங்களில் இடம் பெற ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய இடங்களை கண்டறிய ஆழ்கடல் ஆய்வு செய்யப்படும்.
கீழடியில் ரூ.13 கோடி மதிப்பில் திறந்தவெளி சுரங்கம் அமைக்கப்படும். கிராமப் பகுதிகளில் 8 லட்சம் மக்கள் குடிசைகளில் வாழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கிராமப் பகுதிகளில் 2030-ம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். 2024-25-ம் ஆண்டில் 1 லட்சம் வீடுகள் தலா ரூ.3.5 லட்சம் செலவில் கட்டித்தரப்படும்.
முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ரூ.365 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5 ஆயிரம் நீர்நிலைகளை புனரமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ரூ.500 கோடியில் 5 ஆயிரம் ஏரிகள், குளங்கள் புனரமைக்கப்படும். 5 லட்சம் ஏழை குடும்பங்களை கண்டறிந்து வறுமையை அகற்ற ‘தாயுமானவர் வறுமை ஒழிப்பு திட்டம்’ அறிமுகப்படுத்தப்படும். திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய நிறுவனம் அமைக்கப்படும்.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலைகள் அகலப்படுத்தப்படும். முக்கியமான சாலைகளை அகலப்படுத்தும் திட்டம் ரூ.300 கோடியில் செயல்படுத்தப்படும்.
சென்னையை அழகுற மாற்றும் சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப் படும். சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கோவளம், பெசன்ட் நகர் கடற்கரைகள் மேம்படுத்தப்படும். வடசென்னை வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்படும்.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை தீவுத்திடல் மேம்பாட்டு திட்டம் அறிமுகம் செய்யப்படும். வடசென்னையில் புதிய குடியிருப்புகள், திறன்மிகு பள்ளிகள் அமைத்து ஏரிகள் சீரமைக்கப்படும்.
வடசென்னை வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்படும். சென்னை அடையாறு நதியை சீரமைக்க ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கப்படும்.
பூந்தமல்லியில் ரூ.500 கோடி ஒதுக்கீட்டில் அதி நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும். தமிழ்நாட்டின் முதன்மையான நதிகளை புனரமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
கோவையில் நதிகளை சீரமைக்க ரூ.5 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். நாமக்கல், திண்டுக்கல், பெரம்பலூருக்கு புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.
1 கோடியே 17 லட்சம் குடும்பங்கள் பயன்பெற மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக ரூ.13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நீலகிரி, வால்பாறை போன்ற மலைப்பகுதிகளிலும் மகளிர் இலவச பஸ் பயண திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
சென்னை உள்பட அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க நகர்ப்புற பசுமை திட்டம் அறிமுகம் செய்யப்படும். 100 நாள் வேலை என்று அழைக்கப்படும் ஊரக வேலை திட்டத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
வரும் கல்வி ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.44,907 கோடியாக அதிகரித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை ரூ.1,08,690 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.46 சதவீதம். கடும் சவால்களுக்கு இடையிலும் நிதி பற்றாக்குறையை அரசு குறைத்துள்ளது-
கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்ட சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்
தேசிய பேரிடர் நிவாரணத்திலிருந்து எந்த நிதியும் தற்போது வரை விடுவிக்கவில்லை
மாநில அரசு கடன் பெற மத்திய அரசு கடும் நிபந்தனைகள் விதிப்பதால் வளர்ச்சி திட்டங்கள் பாதிப்பு-
மத்திய அரசு ஒப்புதல் தராததால் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ.9,000கோடி கூடுதல் செலவு
வானிலையை துல்லியமாக கணிக்க 2 புதிய டாப்ளர் ரேடார்கள் அமைக்கப்படும்
ஜிஎஸ்டி-யால் ஒரு ஆண்டுக்கு தமிழகத்திற்கு 20,000 கோடி வருவாய் இழப்பு
திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் நவீன பாதுகாப்பு வசதியுடன் புதிய சிறைச்சாலை அமைக்கப்படும்.
- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.13,720 கோடி ஒதுக்கீடு.
- மகளிர் இலவச பேருந்து பயண ‘விடியல் பயணம்’ திட்டத்திற்கு இந்த ஆண்டில் ரூ.3050 கோடி ஒதுக்கீடு.
- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 25,858 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
- பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,042 கோடி நிதி ஒதுக்கீடு.
- ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.2500 கோடி ஒதுக்கீடு.
- கோவையில் 20 லட்சம் சதுர அடியில் ரூ. 1,100 கோடி செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.440 கோடி நிதி ஒதுக்கீடு.
- சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் மொத்தம் 1000 இடங்களில் Wifi சேவை வழங்கப்படும்.
- குலசேகரன்பட்டினத்தில் விண்வெளித் தொழில் பூங்கா அமைகிறது
- சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்காக ரூ. 12,000 கோடி ஒதுக்கீடு. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் மதுரை, கோவை மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்படும். பரந்தூர், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு மெட்ரோ சேவையை நீட்டிக்க விரிவான செயலாக்க அறிக்கை தயாரிக்கப்படும்.
- விடியல் பயணம் திட்டம் மலைப் பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும்
- மூன்றாம் பாலினத்தவர்களின் கல்லூரிப் படிப்புக்கான செலவை அரசே ஏற்கும்
- தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் நியோ டைடல் பூங்காக்கள்
- தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் புதிய சிப்காட் பூங்கா ரூ. 120 கோடியில் அமைக்கப்படும்
- விருதுநகர், சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்
- கோவையில் கலைஞர் பெயரில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும்
- இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
- சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும்.
- மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் கோவில் சீரமைப்பு பணிகளுக்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
- பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புனரமைப்புத் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.
- அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்.
- ஜவுளி தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
- முட்டுக்காடு அருகே 3 லட்சம் சதுரஅடி பரப்பளவில் கலைஞர் பன்னாட்டு மையம் அமைக்கப்படும்.
- கைவினைஞர் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.
- தமிழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் 46 காவல் நிலையங்கள் திறக்கப்படும்.
- வரும் ஜூன் மாதத்திற்குள் 10 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்.
- வானிலையை துல்லியமாக கணிக்க 2 புதிய டாப்ளர் ரேடார்கள் அமைக்கப்படும்.
- ஜிஎஸ்டி-யால் ஒரு ஆண்டுக்கு தமிழகத்திற்கு 20,000 கோடி வருவாய் இழப்பு.
- மத்திய அரசு ஒப்புதல் தராததால் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு 9,000 கோடி ரூபாய் கூடுதல் செலவு.