தேர்தல் பத்திரங்கள் – புதிய தரவுகள் வெளியீடு
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விவரங்கள் வெளியீடு – யார் யாரிடம் இருந்து எவ்வளவு நிதிகள் பெறப்பெற்றது என்ற தரவுகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் ரூ.509 கோடியை தமிழகத்தின் ஆளும்கட்சியான திமுகவுக்கு தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாக அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் அதிக அளவில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனமாக உள்ளது. லாட்டரி மார்ட்டின் நிர்வாக இயக்கனராக உள்ள ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிஆர் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு அதிக நன்கொடை வழங்கியுள்ளது. ரூ.1,368 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக அளித்துள்ளது.
அன்றே ஜூனியர் விகடன் இதழில் இது குறித்த செய்தி வெளியானது. கடந்த 2019ம் வருடம் “500 கோடி தேர்தல் நிதி!!”சிக்கிய மார்டின் சிக்கலில் திமுக” என்று ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டது. அதற்கு, ஸ்டாலின் விகடன் குழுமம் மீது 1 கோடியே 10 லட்சம் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விவரங்கள், அதற்கு பிறகு வெளியான தகவல்கள் இல்லை. ஆனால் 2021 ஜூலை 21ல், தமிழகத்தில் மீண்டும் லாட்டரி விற்பனைக்கு அனுமதி அளிக்கப் படும் என செய்தி கசிந்தது. 1968ல் அண்ணாவால் லாட்டரி திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டதாகவும் தமிழக அரசின் வருவாயைப் பெருக்கும் திட்டம் என்றும் தகவல்கள் வெளியாகின.
இதேபோல் அதிமுக தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6 கோடி பெற்றுள்ளது. இவற்றில் ரூ.4 கோடியை சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனம் அளித்துள்ளது புதிய விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் நிதி அளித்தபோது அதிமுகவின் பொருளாளராக ஓபிஎஸ் இருந்துள்ளார். இதுதவிர கோயம்புத்தூர் தலைமையிடமாக கொண்ட லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் என்ற நிறுவனமும் தேர்தல் பத்திரம் மூலமாக ரூ.1 கோடியை அதிமுகவுக்கு நிதியாக அளித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் புதிய தரவுகளின்படி, தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக மொத்தமாக ரூ.6,986.5 கோடியை பெற்றுள்ளது. இவற்றில் 2019-20ம் ஆண்டு மட்டும் ரூ.2,555 கோடியை பாஜக பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ.1,334.35 கோடி பெற்றுள்ளது.
- நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ரூ.944.5 கோடி பெற்றுள்ளது,
- ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ரூ.442.8 கோடி பெற்றுள்ளது.
- சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 181.35 கோடி பெற்றுள்ளது.
- மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ரூ.1397 கோடி பெற்றுள்ளது.
- கே சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி ரூ.1322 கோடி பெற்றுள்ளது.
- சமாஜ்வாடி கட்சி ரூ.14.05 கோடி பெற்றுள்ளது.
- அகாலிதளம் ரூ.7.26 கோடி பெற்றுள்ளது.
- அதிமுக ரூ.6.05 கோடி பெற்றுள்ளது.
- தேசிய மாநாட்டு கட்சி ரூ.50 லட்சம் பெற்றுள்ளது.