ஏப்ரல் 19 அன்று, தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்றும், முதல் கட்டத் தேர்தலில் தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்தார். அதன்படி, ஏப். 19 அன்று தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறும். ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரியும் என்று தேர்தல் ஆணையர் கூறினார்.
அதன்படி,
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள்:
மனு தாக்கல் – மார்ச் 20
மனு தாக்கல் முடிவு – மார்ச் 27
மனுக்கள் பரிசீலனை – மார்ச் 28
மனுக்கள் திரும்பப் பெற – மார்ச் 30
வாக்குப் பதிவு – ஏப்ரல் 19
வாக்கு எண்ணிக்கை – ஜூன் 4
நாடு முழுவதும் 18வது நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் 96.8 கோடி பேர் ஓட்டளிக்க தகுதியானவர்கள் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமார் மார்ச்-16 இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்தவை…
நடப்பு, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜூன் இறுதியில் முடிவடைகிறது. இதற்குள் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தி முடிக்க வேண்டியுள்ளது. இதற்கென ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. தேர்தல் திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும். தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது.
தேர்தல் அனைத்தும் சவால் நிறைந்தது. நியாயமான நேர்மையான வெளிப்படையான தேர்தல் நடத்தப்படும் . 800 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்தேன்.
தேர்தலுக்காக 55 லட்சம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளன. இந்தத் தேர்தலில், நாடு முழுவதும் 96. 8 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். இதில் 49.7 கோடி பேர் ஆண்கள் , பெண்கள் 47. 7 கோடி பேர்.
இவர்களில் மாற்றுத்திறனாளிகள் 88. 4 லட்சம் பேர், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 82 லட்சம் பேர்.
வயது மூப்பால் வாக்குச் சாவடிக்கு வர இயலாதவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும்.
முதல் முதலாக 1. 82 கோடி பேர் ஓட்டளிக்க உள்ளனர். ஏப்ரல் 1ம் தேதி 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள்.
மக்கள் வாக்களிக்க 10.7 லட்சம் வாக்குச் சாவடி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வன்முறை இல்லாத அமைதியான தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உறுதி பூண்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடி நீர் அடிப்படை வசதி செய்து கொடுக்கப்படும்.
மாநில எல்லைகள் கண்காணிக்கப்படும். சர்வதேச எல்லைகளிலும் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணி நடக்கும்.
பணம் தவறாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும். போலி செய்திகள் பரவாமல் கண்காணிக்கப்படும். பணப் பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித் துறை, அமலாக்கத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை கண்காணிக்கப்படும். மாலை 6 மணிக்குப் பிறகு வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்படுகிறது.
வாக்குக்கு பணம் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஹெலிகாப்டர்கள், தனி விமானங்களில் தீவிர சோதனை நடத்தப்படும். சமூக விரோதிகளுக்கு எதிராக கடும்0 நடவடிக்கை எடுக்கப் படும்.
சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யலாம். ஆனால் போலி செய்தி பரப்பக்கூடாது. எல்லாம் விமர்சனத்துக்கு உட்பட்டது. தேர்தல் ஆணையத்தை கூட விமர்சிக்கலாம். ஆனால் பொய்ச் செய்திகளைப் பரப்புவது கண்டறியப் பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
போலியான தகவல்கள், செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலில் வெறுப்பு பிரசாரம் இருக்கக்கூடாது. தனி நபர் வாழ்க்கை குறித்து எந்த விமர்சனமும் இருக்கக்கூடாது.
கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் கண்ணியத்துடன் பிரசாரம் செய்ய வேண்டும். மத ரீதியில் தனிப்பட்ட முறையில் விமர்சனம் கூடாது. விளம்பரங்களை நம்பத் தகுந்த செய்தியாக மாற்றக்கூடாது.
பிரசாரத்தில் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளை ஈடுபடுத்தக் கூடாது.
இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. வேட்பாளர் விவரங்களை செயலியில் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.