தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை ஆரத்தி எடுக்கும் பெண்ணுக்கு பணம் கொடுத்ததாக ஒரு வீடியோவை சமூகத் தளங்களில் சுற்ற வைத்து பொய்யான புகார் கொடுத்த விவகாரத்தில், புகார் குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் போலீஸிடம் பதில் அளித்துள்ளார்.
கோவை தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை, ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுப்பது போன்று வெளியான வீடியோ குறித்து விசாரிக்க மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், அது முன்னர் எப்போதோ எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதும், தேர்தல் தொடர்பானது இல்லை என்றும் தெரியவந்ததால், போலி புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரசாரம் மேற்க்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவர் பிரசாரத்தின் போது ஆரத்தி எடுத்த பெண் ஒருவருக்கு பணம் கொடுப்பது போன்று சித்திரிக்கப்பட்டு, வீடியோ ஒன்று வெளியிடப் பட்டது. ஆனால், இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இது குறித்து தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதை அடுத்து, இந்த வீடியோவை போலீஸ் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கிராந்திக்குமார் கூறினார். மேலும்,, அது குறித்து விசாரிக்க உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
வீடியோ நம்பகத் தன்மையை சரிபார்க்க ஆட்சியர் கிட்டயே அத்தனை ஆதாரம் இருக்கே..!
இந்நிலையில், ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்ததாக பரவும் வீடியோ குறித்து விளக்கம் அளித்த அண்ணாமலை, ஒரு வீடியோவில் நம்பகத் தன்மையை தாமே சரிபார்க்க ஆதாரங்கள் இருந்தும் ஏன் விசாரணைக்கு உத்தரவிட்டார் என்று கேள்வி எழுப்பினார் அண்ணாமலை. இது குறித்து அவர் குறிப்பிட்டபோது,
ஒரு காணொளியின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் அத்தனை ஆதாரங்கள் இருந்தும், அதற்குப் பதிலாக, @CollectorCbe அவர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 29.07.2023 அன்று, எங்கள் #EnMannEnMakkal யாத்திரையின் போது எடுக்கப்பட்ட ஒரு காணொளிக்கு, தற்போது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறார்.
அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாக, ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது நமது தமிழகக் கலாச்சாரத்தில் உள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் இதனை நாங்கள் கடைப்பிடிப்பதில்லை.
பிறரைப் போல, பணத்தின் மூலம் கிடைக்கும் வாக்குகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். இன்று இதுபோன்ற பொய்களைப் பரப்பும் கட்சிகள், உண்மையில் வாக்குகளுக்காக பணம் கொடுக்கும்போது நடவடிக்கை எடுக்க, @CollectorCbe அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். – என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், இந்த வீடியோ பழைய வீடியோ என்றும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்படாது என்றும் மாவட்ட ஆட்சியர் பதில் அளித்தார்.