முன்னாள் துணை பிரதமரும், பாஜக., மூத்த தலைவரும் ரத யாத்திரை நாயகன் என்று புகழப் படுபவருமான லால் கிஷன் அத்வானி இல்லத்துக்கே சென்று, பாரத ரத்னா விருதினை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
முன்னதாக, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, இந்தாண்டு பாஜக., மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான லால் கிஷன் அத்வானிக்கும் சேர்த்து அறிவிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்மராவ், சௌத்ரி சரண்சிங், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர் ஆகிய 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இவர்கள் ஐந்து பேரில், எல்.கே.அத்வானியை தவிர மற்ற 4 பேருக்கு நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் அவர்களது குடும்பத்தினரிடம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாரத ரத்னா விருதினை வழங்கினார்.
எனினும் வயது மூப்பு காரணமாக வெளியில் வராமல் இல்லத்தில் முடங்கிக் கிடக்கும் லால் கிஷன் அத்வானிக்கு இன்று அவரது இல்லத்திற்கே நேரில் சென்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாரத ரத்னா விருதினை வழங்கினார். அப்போது, பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர்ஜெகதீப் தன்கர், வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.