கைப்பிடி சுவரை சரி செய்ய கையெழுத்து இயக்கம் நடத்திய திமுக., கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியினரால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை தெற்கு வாசல் விமான நிலைய சாலையில் என். எம். ஆர். சுப்புராமன் பாலத்தின் சுவர் சிதலடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், விபத்து ஏற்படு முன்னரே சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை, மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் பல்வேறு முறை பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
மதுரையில் இரு வருடங்களுக்கு முன் 2022 ஜனவரியில் மாநில முதல் அமைச்சர் ஸ்டாலினால் மதுரை நகரில் திட்டப்பணிகள் காணொளிக் காட்சிகள் வாயிலாக திறந்து வைக்கப்பட்ட போது, “மதுரை தெற்குவாசல் இருப்புப்பாதை மேம்பாலம் கட்டப்பட்டு, ‘தியாகி என்.எம்.ஆர். சுப்புராமன் மேம்பாலம்’ என்று பெயர் சூட்டப்பட்டது கருணாநிதி ஆட்சியில் தான்” என்று பெருமிதமாகக் குறிப்பிட்ட பாலத்தின் கைப்பிடிச் சுவர் சிதிலமுற்று பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலையில் இருக்கிறது.
இப்படி ஆபத்தான நிலையில் இருக்கும் மதுரை தெற்கு வாசல் மேம்பால கைப்பிடி சுவரை சரிசெய்ய வலியுறுத்தி, திமுக., கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதைக் கண்ட பொதுமக்கள், ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சு எம்பி கொடுத்தும், எம்எல்ஏக்கள் கொடுத்தும், மாமன்றத்தில் உறுப்பினர்கள் கொடுத்தும் அவங்க எல்லாம் வேலை செய்யல. இப்ப கையெழுத்து போட்டு பாலத்தை சரி செய்யச் சொல்லி நாம தான் வேலை செய்ய வேண்டியிருக்கு. பொதுமக்களுக்கு இடையூறா ரோட்டுக்கு வந்து நல்லாவே சீன் போடுறாங்க என்று முணுமுணுத்த படி சென்றார்கள்.