தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று புகழ்பெற்ற பாளையங்கோட்டையில் உள்ள கல்வி நிறுவனங்கள் இன்று அந்தப் பெயரை சிதைத்து சின்னா பின்னமாக்கிக் கொண்டிருக்கின்றன. முக்கியமாக, ஆசிரியர் – மாணவர் என்ற புனிதமான உறவு நிலையைக் கடந்து பெண்களை போகப் பொருளாகப் பார்க்கும் ஆசிரியர்கள் சிலரால் மாணவர்களிடையே பெரும் அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது. பேராசிரியர்கள் இருவர் ஒரு மாணவியை சாராயம் குடிக்க அழைத்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பாளையங்கோட்டையில் சேவியர் கல்லூரி, ஜான்ஸ் கல்லூரி, இதே பெயரில் மேல்நிலைப் பள்ளிகள் எல்லாமே ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் அருகருகே உள்ளன. இந்த நான்கு நிறுவனங்கள் மற்றும் சாராள் டக்கர் கல்லூரி பள்ளி ஆகியவற்றின் தன்னிகரற்ற செயல்பாடுகளால்தான் பாளையங்கோட்டைக்கு தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்ற பெயர் கிடைத்தது.
கடந்த வாரம் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை தகாத உறவுக்கு அழைத்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டார்கள். அந்த சூடு ஆறும் முன் சேவியர் கல்லூரியில் மாணவிக்கு தொல்லை கொடுத்த இரண்டு பேராசிரியர்கள் சிக்கி இருக்கிறார்கள்
பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ஜெபஸ்டின் (40), தூத்துக்குடியை சேர்ந்த பால்ராஜ்(40) ஆகியோர் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த நான்காம் தேதி இவர்கள் இருவரும் நெல்லையில் உள்ள விடுதி ஒன்றில் மது அருந்தி உள்ளனர்.
போதை தலைக்கேற பால்ராஜ் தன்னிடம் படிக்கும் முதுகலை வகுப்பு மாணவி ஒருவருக்கு செல்போனில் அழைப்பு விடுத்து அருவருக்கத் தக்க வார்த்தைகளை பேசி இருக்கிறார். ஜெபஸ்டின் ஒரு படி மேலே போய் நாங்கள் இருவரும் தண்ணி அடித்துக் கொண்டிருக்கிறோம். நீயும் வா என்று அழைத்திருக்கிறார்.
பேராசிரியர்களின் தொல்லை தாங்காமல் மாணவி போலீசில் புகார் செய்திருக்கிறார். ஆனால், பின்னர் ஏதோ நிர்பந்தம் காரணமாக மறுநாள் தனது புகாரை வாபஸ் பெற்றுவிட்டார். போலீசார் மாணவியின் பெற்றோர் கூறியதை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி கொண்டு அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.
மகளின் படிப்பு பாதிக்கப்பட்டுவிடும். எனவே மேல் நடவடிக்கை எதுவும் வேண்டாம் என்று மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் கேட்டுக்கொண்டதாக ஒரு தகவல் பரவியது. ஆனால், போலீஸாரின் மிரட்டலின் பேரிலேயே அந்த மாணவியை அழைத்து புகாரை வாபஸ் பெறச் செய்தார்கள் என்ற தகவலும் பரவியது.
இதையடுத்து இந்த மர்மமான நடவடிக்கையின் பின்னே உள்ள உண்மையைக் கொண்டு வர வேண்டும் என்று நெல்லை மாநகர இந்து முன்னணி அமைப்பு களம் இறங்கியது.
காவல்நிலையத்திற்கு வந்து முதலில் தைரியமாக புகார் கொடுத்தவர்கள் பின்பு புகாரை வாபஸ் பெறுகிறார்கள் என்றால் இடையில் நடந்தது என்ன? பாளையங்கோட்டை கல்லூரி விஷநரிகளால் மாணவி குடும்பத்தினர் மிரட்டப்பட்டனரா? பெண்களுக்கு எதிரான குற்றத்தில் புகார்தாரர்கள் புகாரை திரும்ப பெறும் நிலைக்கு நெல்லை மாநகர காவல்துறை மெத்தனமாக காலதாமதமாக வழக்கு விசாரணை செய்கிறார்களா? பாதிக்கப்பட்ட மாணவி புகார் கொடுத்தவுடன் ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை?
பெண்களுக்கு எதிரான குற்றத்தில் எல்லா புகார்களும் இது போல் திரும்ப பெற அனுதிக்கப்படுமா? விஷநரிகள் ஆதிக்கத்திற்கு காவல்துறை கைகள் கட்டப்பட்டதா? ஆளுக்கொரு நீதி, கல்லூரிக்கொரு சட்டமா? பெண்களுக்கு எதிரான இந்த அநீதியை மாண்புமிகு மதுரை உயர்நீதிமன்றம் இதை தன்னிச்சையாக (Su-moto) விசாரித்தால் பல உண்மைகள் வெளிவருமா? என்று நெல்லை மாநகர இந்து முன்னணியினர் கேள்வி எழுப்பினர்.
மேலும், சம்பந்தப்பட்ட பேராசிரியர்களை கைது செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.
பாளையங்கோட்டை கல்லூரியில் மாணவிக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொந்தரவு விவகாரத்தில், புகார் கொடுத்த மாணவி மிரட்டப்பட்டாரா? கொடுத்த புகாரை மகளின் படிப்பு பாதிக்கும் என பெற்றோர் சில மணி நேரத்தில் வாபஸ் பெற காரணம் என்ன? காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதியவிடாமல் தடுத்தது எந்த சக்தி?
விஷநரிகளால் மூடிமறைக்கப்பட்ட பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க உள்ளது. மாண்புமிகு உயர்நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. நான்கு நாள் விடுமுறைக்கு பின் விடை கிடைக்கும். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட உள்ளது அவர்கள் நேர்மையாக நடுநிலையோடு செயல்டுவார்கள் என நினைக்கிறோம். விஷநரிகள் கல்லூரியில் பாதிக்கப்பட்ட இந்து மாணவிக்கு நீதி கிடைக்கும் என நம்புவோம் என்று, இந்துமுன்னணி அமைப்பினர் சமூகத் தளங்களில் பரவலாக செய்தியைப் பரவவிட்டனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியவரவே, உளவுத்துறை மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்மாவட்ட விவகாரங்களைக் கவனித்து வரும் ஏ.டி.ஜி.பி. உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா, இந்த விவகாரத்தில் நேரடி கவனம் செலுத்தி விசாரணை நடத்தினார்.
விசாரணையில் ஜெபஸ்டின், பால்ராஜ் ஆகிய இருவரும் மாணவிக்கு போன் செய்து ஆபாசமாக பேசியது உறுதியானது. இதை அடுத்து நேற்று நள்ளிரவு தூத்துக்குடியில் தனது வீட்டில் தங்கி இருந்த ஜெபஸ்டினை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தகவல் அறிந்து பேராசிரியர் பால்ராஜ் தலைமறைவாகிவிட்டார்.
பாளையங்கோட்டை போலீசார் இரு பேராசிரியர்கள் மீதும் இந்திய தண்டனை சட்டம் 74, 75, 79(5) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேவியர் கல்லூரி, இருபாலர் பயிலும் கல்லூரியாக மாறிய பின், அவ்வப்போது பாலியல் சீண்டல் புகார்கள் வருகின்றன. கல்லூரி முதல்வர் காட்வின் ரூபஸ், பேராசிரியர்களை அழைத்து கூட்டம் ஒன்று நடத்தியதாகவும், அந்தக் கூட்டத்தில், ‘மாணவியரிடம் தவறாக பேசினாலும் பாலியல் பிரிவுகளில் கைதாக நேரிடும். பேராசிரியர்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். பேராசிரியர் மீது புகார் நிரூபிக்கப்பட்டால் கல்லூரி நிர்வாகம் பாதுகாக்காது’ என எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது வழக்கில் சிக்கியுள்ள இருவரும் சுயநிதிப் பிரிவில் பேராசிரியர்களாக பணியாற்றினர். பால்ராஜுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துள்ளது. அதற்காகத்தான் அவர் சக பேராசிரியர்களுக்கு பாரில் விருந்து அளித்தார். இருவருக்கும் திருமணமாகி குடும்பங்கள் உள்ளன.
இத்தகைய சம்பவங்களால், ஆசிரியர சமூகம் வெட்கி தலைகுனியும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்று சமூகத் தளங்களில் பலர் கருத்துகளைத் தெரிவித்தனர்.
இதை அடுத்து இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த இந்து முன்னணி அமைப்பின் கா.குற்றாலநாதன், பாளை சேவியர் கல்லூரியில் இந்து மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதி இது. மாணவி குடும்பத்தினரை மிரட்டி மூடி மறைக்க முயன்ற நிலையில் இந்துமுன்னணி கோரிக்கையை தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுத்த மாநகர காவல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி என்று கூறினார்.