
‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.
1940ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் கஸ்துாரிரங்கன் பிறந்தார். இவரது பூர்வீகம் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம். எர்ணாகுளத்தில் ஸ்ரீ ராம வர்மா பள்ளியில் பள்ளிப் படிப்பையும் பின்னர் மும்பையில் கல்லூரிப் படிப்பும் முதுநிலைப் படிப்பும் முடித்தார்.
1994ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான ‘இஸ்ரோ’வின் தலைவராக இருந்தார். இவரது பணிக்காலத்தில் இஸ்ரோ புதுப்புது சாதனைகளை படைத்து சர்வதேச அளவில் புகழ்பெற்றது.
இஸ்ரோவில் இருந்து பணி ஓய்வு பெற்ற பிறகு, ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணிபுரிந்துள்ளார்.
இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ , பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் ஆகிய 3 உயரிய விருதுகளை வழங்கியுள்ளது. ராஜ்யசபா உறுப்பினராகவும், மத்திய திட்டக்குழு உறுப்பினராகவும் கஸ்துாரி ரங்கன் பணியாற்றினார்.
கஸ்தூரிரங்கன் தலைமையில் உருவாக்கப்பட்ட வரைவுக் குழுவின் பரிந்துரைகளின் படியே புதிய கல்விக் கொள்கை 2020ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு சமர்ப்பித்த விரிவான அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் குறிப்பில்,
இந்தியாவின் அறிவியல் மற்றும் கல்விப் பயணத்தில் ஒரு உன்னத நபரான டாக்டர் கே. கஸ்தூரிரங்கனின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது தொலைநோக்குத் தலைமையும், தேசத்திற்கு தன்னலமற்ற பங்களிப்பும் எப்போதும் நினைவுகூரப்படும். அவர் விடாமுயற்சியுடன் இஸ்ரோவுக்கு சேவையாற்றினார். இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை புதிய உயரங்களுக்கு அழைத்துச் சென்றார். அதன்மூலம் நாம் உலகளாவிய அங்கீகாரத்தையும் பெற்றோம். அவரது தலைமைத்துவம் லட்சிய செயற்கைக்கோள் ஏவுதல்களையும் கண்டது புதுமைகளில் கவனம் செலுத்தியது. என்று பிரதமர் மோடி தனது இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, இஸ்ரோ தலைவராகவும், தேசியக் கல்விக் கொள்கை வடிவமைப்புக் குழு தலைவராகவும், மேலும் பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றிய, பெருமதிப்பிற்குரிய டாக்டர் திரு. கஸ்தூரி ரங்கன் அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. டாக்டர் திரு. கஸ்தூரி ரங்கன் அவர்களது மறைவு, இந்திய விஞ்ஞானத் துறைக்குப் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி! – என்று, பாஜக.,வின் முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில்,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், புகழ்பெற்ற அறிவியலாளருமான முனைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கேரளத்தில் பிறந்த தமிழரான முனைவர் கஸ்தூரி ரங்கன், இந்திய வின்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவராக பதவி வகித்த காலத்தில் தான் ஏராளமான செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு, புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர். மேற்குத் தொடர்ச்சி மலைகளை பாதுகாப்பதற்காக கஸ்தூரிரங்கன் குழு தயாரித்து அளித்த பரிந்துரை அறிக்கை வரலாற்று சிறப்பு மிக்கதாகும். நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினராக பணியாற்றியவர் கஸ்தூரிரங்கன். அவரது மறைவு இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், அறிவியலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். – என்று குறிப்பிட்டுள்ளார்.





