
மதுரை: கருப்பு, வெள்ளை, சிகப்பு நிறத்தில் நடுவில் ‘ஜெ’ படம் கூடிய புதிய கொடியை அறிமுகப்படுத்தினார் டி.டி.வி.
மேலூரில் நடைபெறும் டிடிவி தினகரனின் கட்சிக் கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் பங்கேற்றுள்ளனர்.
22 எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளதாக தங்க தமிழ்செல்வன் தகவல் தெரிவித்துள்ளார். ”அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என்ற புதிய பெயரை அறிவித்தார் தினகரன். இந்தப் புதிய புதிய கட்சியின் பெயர் ” அமமுக- அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” என பெயரில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் திராவிடம் என்ற சொல் இல்லை.

மதுரை மேலூரில் நடைபெற்று வரும் அவரது அணியினர் கலந்துகொண்டுள்ள புதிய கட்சி தொடக்க விழாவில், புதிய கட்சியின் பெயரை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். முன்னதாக, தான் தொடங்குவது புதிய கட்சி இல்லை, புதிய அணி என்று கூறிவந்தார். தாம் இன்னும் அதிமுக.,வில் தான் இருக்கிறேன் என்பதைக் கூறும் வகையிலும், தமது ஒரே இலக்கு அதிமுக., தான் என்றும் தெரிவிப்பதற்காக அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
இந்நிலையில், கட்சியின் பெயராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று அறிவித்துள்ளார். இது ஆங்கிலத்தில் ஏ.எம்.எம்.கே., அ.ம.மு.க., எனும் வகையில் வருகிறது. அதிமுக., வில் உள்ள ’தி’ எழுத்துக்குப் பதிலாக, ’ம’ வருகிறது.

மேலூர் அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் இடத்தில் 60-க்கு 40 வடிவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்ட மேடையில் டிடிவி தினகரன் உள்பட அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ளனர்.
இன்று காலை 9.30 மணி அளவில் மேடைக்கு வந்த டிடிவி தினகரன் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து மேடையில் தொண்டர்களிடையே தனது கட்சியின் பெயரை சரியாக 10.30 மணிக்கு டிடிவி தினகரன் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய அவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆட்சியை பிடிக்கும் என்று சூளுரைத்தார்.



