
காவிரித் தண்ணீர்தான் வேண்டும் என்றால், தமிழர்கள் அழுது புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் என்று பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, காவிரி நீர் கிடைக்காது என்று சில மாதங்களுக்கு முன்னமேயே டிவிட்டரில் பதிவிட்டார் சுவாமி. அப்போதும் பெரும் அளவில் அவருக்கு எதிரான குரல்கள் எதிரொலித்தன. இந்நிலையில் மீண்டும் அதே வார்த்தையைச் சொல்லி, கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளார் சு.சுவாமி.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை குறித்த காலத்துக்குள் மத்திய அரசு செயல்படுத்தாத நிலையில், மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்ப்பு அளித்த நாளில் இருந்து 3 மாத கால அவகாசம் வேண்டும் என்றும், தீர்ப்பில் குறிப்பிட்ட ‘ஸ்கீம்’ என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
மத்திய அரசின் இந்தச் செயலுக்கு அரசியல் கட்சியினர், விவசாயிகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தி.மு.க, நாம் தமிழர், ஆம் ஆத்மி, விவசாயிகள் அமைப்பினர் என பலரும் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், சுப்பிரமணியம் சுவாமி தனது டிவிட்டர் பதிவில், தமிழகத்துக்கு காவிரி நீர்தான் வேண்டும் என்றால், அழுது புலம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘தமிழக மக்களுக்குத் தண்ணீர் வேண்டும் என்றால், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் உதவ நான் தயார். காவிரி நீர் தான் வேண்டும் என்றால் அழுது புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்’ என பதிவிட்டுள்ளார். மேலும் இதே வார்த்தைகளை செய்தியாளர்கள் சந்திப்பிலும் கூறியுள்ளார்.
அவரது பதிவு:
If Tamil people want adequate drinking and field water I can arrange through sea water desalination plants. If Cauvery water then howl&cry
— Subramanian Swamy (@Swamy39) April 1, 2018



