சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 21 எம்.எல்.ஏ.க்கள் பற்றி சசிகலா உறவினர்கள் திவாகரன், ஜெய்ஆனந்த் தவறான செய்திகளை பரப்புகின்றனர் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனுக்கும் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் இடையே மோதல் முற்றியிருப்பதாகக் கூறப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிடிவி தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டிடிவி தினகரனுக்கு பக்கபலமாக இருக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ.க்கள் உள்ளிட்டவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையில், தங்கள் உணர்வை காயப்படுத்தும் எண்ணத்தில், சசிகலா குடும்பத்தை சேர்ந்த திவாகரனும், ஜெய் ஆனந்தும் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு மகாதேவன் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு துக்கம் விசாரித்த சில அமைச்சர்களையும், எம்எல்ஏ.க்களையும் மூளைச்சலவை செய்து அவர்களை நிரந்தரமாக எடப்பாடி அணியில் இருக்குமாறு பார்த்துக் கொண்டது யாரென்பது தங்களுக்கு தெரியும் எனவும் அவர் திவாகரனை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
ஏதோ தங்கள் பின்னால்தான் 18 எம்எல்ஏ.க்களும் இருக்கிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்கி, எடப்பாடி பழனிசாமியோடு தொடர்பு வைத்துக் கொண்டு சசிகலாவை சிறையிலிருந்து மீட்கப் போகிறேன் என்ற ரீதியில் திவாகரன் செயல்படுவதாகவும் வெற்றிவேல் குறை கூறியுள்ளார்.
திவாகரன் தங்களின் தியாகத்தை பலிகடா ஆக்க முயல்வதாகவும், தெளிவாக இருக்கும் தங்களை குழப்பி சுயலாபம் அடைய முயற்சிக்க வேண்டாம் என்றும் ஃபேஸ்புக் பதிவில் வெற்றிவேல் கூறியுள்ளார்.
அவரது பேஸ்புக் பதிவு:
மாண்புமிகு. அம்மா அவர்களின் மறைவுக்கு பிறகு, கழகத்தின் ஆணிவேராக சின்னம்மாவும், கழகத்தின் முகமாக துணைபொதுச்செயலாளர் அண்ணன் TTV தினகரனும் செயல்பட்டு வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. மன்னிக்க முடியாத துரோகத்தாலும், மறக்க முடியாத சூழ்ச்சியாலும் சின்னம்மா அவர்கள் சிறைக்கு சென்ற பிறகு, பல்வேறு அடக்குமுறைகள், அத்துமீறல்களுக்கும் மத்தியில் கழகத்தை வலிமையோடு, முன்னெடுக்கும் பணியில் துணைபொதுச்செயலாளர் அண்ணன் TTV தினகரன் செயலாற்றிவருகிறார்…
அவருக்கு பக்கதுணையாக, நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு இன்னல்களை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு, தியாகத்தாயின் பின்னால், நான் உட்பட 18 + 3 சட்டமன்ற உறுப்பினர்களும், எண்ணிலடங்கா கழக தொண்டர்களும் அணிவகுத்து நிற்கிறோம்.
ஆனால்,, எங்கள் தியாகத்தை கொச்சைபடுத்தும் நோக்கில், எங்கள் உணர்வை காயப்படுத்தும் எண்ணத்தில், சின்னம்மா குடும்பத்தை சார்ந்த திரு. திவாகரனும்,ஜெய்ஆனந்தும் செயல்படுவது வேதனையளிக்கிறது…
சின்னம்மாவின் மீது சுமத்தப்பட்ட பொய்யான வீண்பழிகளையும், தங்கள் குடும்பத்தின் மீது சுமத்தப்பட்ட பழி சொற்களையும் அண்ணன் தினகரன் கழகத்தை தலைமையேற்று நடத்திய இந்த காலகட்டத்தில் தான் முறியடிக்க முடிந்தது என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள்.
கடந்த ஆண்டு மறைந்த திரு.மகாதேவன் அவர்ளின் இறுதிசடங்கில் கலந்து கொண்டு துக்கம் விசாரித்த சில அமைச்சர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும், மூளைச்சலவை செய்து, அவர்களை நிரந்திரமாக எடப்பாடி அணியில் இருக்குமாறு பார்த்துக்கொண்டது யாரென்பதும் எங்களுக்கு தெரியும்…
மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் அடிபணியக்கூடாது என்கிற காரணத்தினால் தான், சின்னம்மா நெஞ்சம் நிமிர்த்தி சிறைக்கு சென்றார். ஆனால் ஏதோ தங்கள் பின்னால் தான் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதுபோல் தோற்றத்தை உருவாக்கி, அதே மதவாத சக்திகளுக்கு அடிமையாகி போன பழனிசாமியோடு தொடர்பு வைத்துக்கொண்டு சின்னம்மாவை சிறையில் இருந்து மீட்கப்போகிறேன் என்கிற ரீதியில் திரு.திவாகரன் செயல்படுவது உண்மைக்கு புறம்பானது.இதனை முதலில் சின்னம்மா ஏற்றுக்கொள்வாரா?. தங்களின் சுயலாபத்திற்காக கழகத்தையும், எங்களின் தியாகத்தையும் பலிக்கடாவாக முனையாதிர்கள் … நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம், எங்களை குழப்பி, சுயலாபம் அடைய நினைக்காதீர்கள்
எடப்பாடி அணி நிர்வாகியான சத்திரப்பட்டி சிவகிரி என்பவர், 18, சட்டமன்ற உறுப்பினர்களும் திரு. திவாகரன் பின்னால் தான் இருக்றார்கள் என்பதை போன்ற ஒரு பொய் பரப்புரையை செய்கிறார். இவர் யார் தூண்டுதலின் பேரில் செயல்படுகிறார் என்பதும் எங்களுக்கு தெரியும். இந்த நேரத்தில் அனைவருக்கும் ஒன்றை தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன், எங்கள் தலைமை சின்னம்மாவும், அண்ணன் TTV தினகரனும் தான். இவர்கள் இருவரை தாண்டி, வேறு எவரின் கண்ணசைவுக்கும், குரலுக்கும் எங்கள் சிரம் அசையாது, எவருக்காகவும் எங்கள் தரம் மாறாது…
எதுவரினும், எவர் எதிர்ப்பினும், எங்கள் பயணம் என்றும் சின்னம்மாவுடனும், அண்ணன் TTV தினகரனுடனும் தான் என்பதில் மலையளவு உறுதியோடு இருக்கிறோம், காலத்துக்கும் இருப்போம்…
#ADMK #vetrivel #AIADMK
Correct