தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக., செயல்தலைவர் ஸ்டாலின், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க.செயல் தலைவர் ஸ்டாலின் தலைமை செயலாளரை சந்தித்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது கண்டிக்கத் தக்கது. போராட்டக்காரர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண முயற்சி செய்திருக்க வேண்டும். மேலிடத்து உத்தரவு வராமல் இந்த துப்பாக்கிச்சூடு நடந்திருக்க வாய்ப்பில்லை. துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இந்த அரசு தலா ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்… என்று கூறினார்.
ஸ்டாலின், நாளை கர்நாடக முதல்வர் குமாரசாமியின் பதவியேற்பு விழாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் தூத்துக்குடி சம்பவம் நடந்ததால், பெங்களூரு பயணத்தை ரத்து செய்துவிட்டு, நாளை தூத்துக்குடி சென்று துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை பார்வையிடவுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் செய்தியாளர்களிடம் பேசியபோது, ,மக்கள் வாழும் பகுதியை ஸ்டெர்லைட் ஆலை மாசுபடுத்தி கொண்டுள்ளது. ஆலைக்கு ஆதரவாக சட்டதிட்டங்களை ஏவுவது கண்டிக்கத்தக்கது. துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்பதுதான் தமிழகத்தின் இன்றைய கேள்வி. இந்தக் கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். தூத்துக்குடியில் நடந்த சோகத்தை தமிழகம் மறக்காது. போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், துப்பாக்கிச்சூடு வரை போனது ஏன்? ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதே இன்றைய நிலை. இறந்தவர்கள் குடும்பத்தை காக்க வேண்டும். மக்கள் அமைதி காக்க வேண்டும் என அரசு சொன்னால் போதாது. அரசும் அமைதியாக இருக்க வேண்டும் என்றார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் இது குறித்து குறிப்பிடுகையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும் மக்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது அநீதி என்று டிவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.
ஸ்டெர்லைட் துபாக்கிச்சூடு சம்பவத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. நடிகர் விஷால் இது குறித்து தனியாக தனது டிவிட்டர் பதிவில் கண்டனம் தெரிவித்தார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். துாத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப் பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என அவர் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.




