ஒரு நடுத்தர அளவிலான வீடு ம் இரு பக்கமும் மணிபிளான்ட் செடிகள் வளர்த்து ,பசும்புல் தரை நடுவில் நவீன ஊஞ்சல் கட்டி , காம்பவுண்ட் சுற்றி நிழல் தரும் மரங்களை வளர்த்து , வீட்டு நுழைவுவாயில் இருபுறமும் ஆட்கள் அமர சிமெண்டு மேடை அமைத்து ,கண்கவரும் அழகான வடிவமைப்பில் ,மனதைப் பரவசப்படுத்தும் அந்த வீட்டிற்குள் நுழைந்தேன் . வரவேற்பறை பூ ஜாடியில் கண்சிமிட்டிய வண்ணப் பூக்கள் தந்த மகிழ்வில் ஹாலுக்குள் நுழைந்தேன் . நாசியை சுகமாக வருடியது பூஜையறை நறுமணமும் ,சமையலறை பில்டர் காபியின் மணமும் ஆஹா ..! மூச்சை இழுத்தேன் . தட்டென்று முதுகில் ஒரு செல்லத்தட்டு ..திடுக்கிட்டு விழித்தேன் . கணவர்தான் … அட , கனவா இது ?
கற்பனையிலேயே இவ்வளவு மகிழ்ச்சி என்றால் உண்மையில் பணக்காரர் வீட்டு பங்களாக்கள் எவ்வளவு நிம்மதியை தரும் . இதைப் பற்றி ஆராய்ந்தே ஆகவேண்டும் என்று என் ஆறாவது அறிவு அறிவுறுத்தியதன் விளைவு , பணத்தை தண்ணீராக செலவழித்துக் கட்டிய எனக்குத் தெரிந்த பெண்மணியின் வீட்டுக்கு படையெடுத்தேன் . கண்ட இடமெல்லாம் பணத்தின் பெருமை தெரிய , வெகு அழகாக கலைநயத்துடன் கட்டப்பட்டிருந்த அந்த பங்களாவில் வசிக்கும் அந்தப்பெண் எவ்வளவு சந்தோசமாக இருக்கவேண்டும் ?அவரிடமே கேட்டுவிட்டேன்.
” என்னம்மா வீடு இது ? பணத்தை கொட்டி கட்டினப்ப ,குடும்பத்தோட சந்தோசமா இருக்கலாம்னுதான் நினைச்சேன் . ஏதோ என் கணவர் இருந்த வரைக்கும் எனக்கு தனிமை பயம் தெரியலை . இப்ப பசங்க படிச்சுட்டு வேலைக்காக வெளிநாடு போயிட்டாங்க . ஏன்தான் இப்படி பெரிய வீட்டிலிருந்து கஷ்டப் படுறோம்னு தெனம் நெனைச்சு வேதனையா இருக்கு . என்னதான் சொந்தக்காரங்களும் , வேலைக்காரங்களும் வந்துபோனாலும் எம்புள்ளைங்க இருப்பது போலாகுமா ? இது அவங்களுக்குப் புரியாம பணத்த தேடி ஓடிட்டு இருக்காங்க . என் கணவர் ஆசையா கட்டுன வீட்ட விட்டு என்னால போகவும் முடியல , தனியா இருக்கவும் முடியாம இரண்டுங் கெட்டான் நிலையில இங்க இருக்கேன் “
மனதில் இருந்த வேதனையைக் கொட்டினார் அவர் . சற்றுமுன் என் கண்களுக்கு ஆடம்பரமாய்த் தெரிந்த அந்த அழகுபங்களா இப்போது அந்த பெண்ணின் ஏக்கப்பெருமூச்சுகளை தாங்கி நின்ற சோகசின்னமாகத் தெரிந்தது .
பணக்கார வீட்டுக் கதையே இப்படி என்றால் மற்ற வீடுகள் … அதையும் பார்த்து விடலாம் என்று எண்ணி எனக்குத்தெரிந்த உறவுப்பெண்ணின் வீட்டுக்குச் சென்றேன் . அது மூச்சு விட்டால் கூட அடுத்த வீட்டுக்கு கேட்கும் படியான நெருக்கமான ஒண்டுக் குடித்தன வீடு .நான் சென்ற நேரம் தெருவோர குடிநீர் பைப்பில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது . என்னை வரவேற்றவள் ,” அக்கா ஒரு நிமிஷம் , ப்ளீஸ்..என் முறையில தண்ணீ பிடிக்கலைனா வம்பாயிரும் ..” என்றவள் சிட்டாய் பறந்து பறந்து தண்ணீரையெல்லாம் பிடித்து வைத்துவிட்டு , சிணுங்கிக்கொண்டு இருந்த குழந்தையைத் தூக்கி பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் சிறிது நேரம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று ஒப்படைத்து விட்டு ,என்னிடம் வந்து ,”என்ன விசயம்கா ?” என்றாள் .
நான் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு ” பாவம்டி நீ, கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த ஒன்டுக்குடித்தனத்துல இருந்து எவ்வளவு கஷ்டப் படறே ?” என்று கேட்டேன் . அவளோ வெகு சாதாரணமாக ” அப்படியெல்லாம் இங்கே எந்தக் கஷ்டமும் இல்லக்கா .., தண்ணீர் ,கரன்ட்டுன்னு பொதுவில சில பிரச்சினைகள் வந்தாலும் .., அக்கம்பக்கத்துல அனுசரணையா இருக்கவங்களா அமைந்திட்டா இந்த ஒன்டுக்குடித்தனம் கூட சொர்க்கமா மாறிடும் , இல்லையாக்கா ? என என்னையே திருப்பிக் கேட்க ,நான் மூக்குடைந்து “ஞே ” என்று விழித்தேன் .
மேலும் சில வீடுகளுக்குச் சென்று சர்வே எடுத்ததில் சில உண்மைகள் புரிந்தது . குடிசையிலும் , பிளாட்பாரங்களிலும் வாழும் சாமான்யர்களின் சொர்க்கம் அவர்களின் மனம்தான் என்றும் , நெருக்கமான வீடுகளில் வாழ்பவர்களுக்கு சகிப்புத்தன்மையும் ,அன்பான அனுசரணையும் தான் அவர்களின் வீடுகளில் கிடைக்கும் சொர்க்கம் என்றும் புரிந்தது . நவநாகரீகம் என்ற பெயரில் தன்னந்தனியே நிற்கும் ஆடம்பரப் பங்களாக்கள் தொலைவில் இருந்து பார்ப்பதற்கு சொர்க்கமாகத் தெரிந்தாலும் அதில் தனித்தீவாக வாழும் மனிதர்களின் நரகமாகத்தான் அந்த பங்களாக்களை உணர்ந்தேன் .
நமது கனவு இல்லம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் , ஆனால் அது சொர்க்கமாக மாற நம்முடைய மனம் எதையும் ஏற்கும் , எதையும் சகிக்கும் , எல்லோரையும் சமமாக பாவிக்கும் , சகமனிதரிடம் அன்பை பொழியும் அமைதிப் பூங்காவாக மாற வேண்டும் . அப்படி மாறும்;போது மட்டுமே நம் இல்லங்கள் சொர்க்கமாக இருக்கும் . அது குடிசையாக இருந்தாலும் , பங்களாவாக இருந்தாலும் ….


