தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அவர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தூத்துக்குடி சம்பவம் மிகவும் துயரமான அனைவரது நெஞ்சையும் உருக்குகின்ற சம்பவமாக ஆகிவிட்டது. அதற்கு அரசு சார்பாக வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த 47 பேரையும் சந்தித்து ஆறுதல் கூறப்பட்டிருக்கிறது. அவர்கள் முழுவதுமாக தேறி நல்ல நிலைக்கு திரும்புவார்கள்.
2013-இல் ஜெயலலிதா ஆட்சியில் மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகி மீண்டும் ஆலையை திறந்தது.
பசுமை தீர்ப்பாய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. எனவே ஆலையை நிரந்தரமாக மூடக்கூடிய நடவடிக்கைகளை அரசு எடுக்கும்.
அதிமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை. தூத்துக்குடியில் அமைதி திரும்ப மாவட்ட நிர்வாகமும், அரசும் நடவடிக்கை எடுக்கும்” என்றார்.



