தூத்துக்குடியில் கலவரத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களைப் பார்த்து ஆறுதல் கூற இரு தினங்களுக்கு முன்னர் ரஜினி காந்த் தூத்துக்குடிக்குச் சென்றிருந்தார். அப்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சந்தோஷ் என்ற இளைஞர், ரஜினியிடம் “யார் நீங்க?” என்று கேட்டது, பெரும் பரபரப்பாக ஊடகங்களால் முன்னிறுத்தப்பட்டு விவாதிக்கப் பட்டது.
இந்நிலையில், தனது கேள்விக்கு நியாயம் கற்பிக்கும் விதத்தில் அந்த நபர் கூறியதை ஊடகங்களில் பிரபலப் படுத்தி வருகிறார்கள். ஆனால், ஊடகங்களால் வெளிச்சம் போட்டுக் காட்டப்படாத உண்மைகளை சமூக ஊடகங்கள் வெளிப்படுத்தி விடுகின்றன. அந்த வகையில், சந்தோஷ் முன்னர் தேசியக் கொடியை எரித்து சமூக வலைத்தளங்களில் உலவ விட்ட திலீபன் என்ற நபருடன் தொடர்புள்ளவராக ஒரு படம் உலா வருகிறது.
அப்போதும், தேசியக் கொடியை எரித்து தேச துரோகச் செயல்களில் ஈடுபட்ட ஓர் இளைஞனை ஏதோ தியாகியைப் போல் சித்திரித்து தேசதுரோக ஊடகங்கள் பேட்டிகளை எடுத்து ஒளிபரப்பின. இப்போதும் திலீபனைப் போல், யாரோ எழுதிக் கொடுத்த ஸ்க்ரிப்டைப் படித்த சந்தோஷ் ஊடகங்களால் ஒரு போராளியாக சித்திரிக்கப் படுகிறான் என்று உள்ளம் குமுறுகிறார்கள் சமூக நோக்கர்கள்.
உண்மையில் பின்னணி இதுதான் என்றால் … சந்தோஷ் நீ கேட்ட “யார் நீங்க?” என்ற கேள்வியில் எந்தத் தவறும் இல்லை… நியாயமானதுதான்…!





