ராமேஸ்வரம்: வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற மீனவர் சங்கங்களின் அவசரக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முழு அடைப்புக்கு ஆதரவு தருமாறு வரும் 15-ஆம் தேதிக்குப் பின்னர் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுவது என அந்த சங்கங்கள் முடிவு செய்துள்ளன. மேலும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் அண்மையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தில்லியில் வைத்து சந்தித்தனர். அப்போது தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக எல்லை தாண்டிச் செல்லக் கூடாது என்று அவர் எச்சரித்தார். எல்லை தாண்டும் மீனவர்களால் இந்தியா – இலங்கை இடையே பிரச்னை அதிகரிப்பதாக அவர் கூறியிருந்தார். மேலும், எல்லை தாண்டிச் சென்று இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டால் மத்திய அரசு அதற்குப் பொறுப்பாகாது என்றும் தம்மைச் சந்தித்த மீனவர்களிடம் அவர் தெரிவித்திருந்தார். சுஷ்மா ஸ்வராஜின் இந்தப் பேச்சைக் கண்டித்து, மீனவர் சங்கங்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
சுஷ்மா ஸ்வராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்புப் போராட்ட முடிவு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari