சென்னை: இன்று திராவிடர் கழகம் கண்ட ஈ.வே.ராமசாமி நாயக்கரின் 140வது பிறந்த நாள் அனுசரிக்கப் பட்டது. இந்நிலையில் சென்னை சிம்சன் அருகே அண்ணா சாலையின் நடுவில் வைக்கப் பட்டுள்ள ஈ.வே.ராமசாமி நாயக்கர் சிலையின் மீது இளம் வழக்கறிஞர் ஒருவர் செருப்பை வீசி எதிர்ப்பைத் தெரிவித்தார்.
மேலும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள ஈ.வே.ரா. சிலையின் தலைப் பகுதியில் செருப்பு வைக்கப் பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த திக., திமுக., தொண்டர்கள் போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டம் தன் இரும்புக் கரத்தைப் பாய்ச்ச வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின்!
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்…
சுயமரியாதை வெளிச்சம் பாய்ச்சிய தந்தை பெரியார் அவர்களுக்கு தமிழ்நாடே நன்றி செலுத்துகிற நேரத்தில், சமூகநீதிக் கொள்கையை தகர்த்து, ஒற்றுமை உணர்வை குலைத்து – மதவாதப் பேயாட்டம் ஆட நினைக்கும் மூடர்கள் பெரியார் அவர்களின் சிலையை அவமானப்படுத்த முயற்சித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது!
மதவெறி சக்திகளின் பின்னணியில் இதுபோன்ற இழிவான – தரங்கெட்ட செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை ஒட்ட நறுக்க வேண்டியது நம் கடமை! ஆகவே, உடனடியாக அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வதோடு, இதன் பின்னணியில் இருக்கும் அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்! – என்று கோரியுள்ளார்.





