திருவண்ணாமலை கோயிலில் கோபரணி தீபம் ஏற்றம் : பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

 

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பஞ்சபூதத் தலங்களில் அக்னித்தலமான அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கோபரணி தீபம் இன்று அதிகாலை 4 மணிக்கு பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலையில் கடந்த 16ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் ஒருபகுதியாக கடந்த நவம்பர் 21ம் தேதி வெள்ளித் தேரோட்டமும், 22-ம் தேதி கொட்டும் மழையில் பெரிய தேரோட்டத்துடன் பஞ்ச ரதங்களின் தேரோட்டமும் நடைபெற்றது.

மேலும் இன்று அதிகாலை 4 மணிக்கு தீபவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் கோயில் மூலவர் சன்னிதியில் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் ஏற்றப்பட்டது.

இன்று மாலை 6 மணிக்கு கோயில் தங்கக் கொடிமரம் எதிரே சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளிக்க, 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலையில் தீப திருவிழாவையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.