
வேலூர்: ஜாமீன் கிடைத்ததை அடுத்து, வேலூர் சிறையில் இருந்து எம்.எல்.ஏ., கருணாஸ் வெளியில் வந்தார்.
தமிழக முதல்வர் குறித்த அவதூறு, காவல்துறை உயரதிகாரி குறித்து மிரட்டல் என கடந்த ஒருவாரமாக தமிழக அரசியல் களத்தை சூடாகவே வைத்திருந்த எம்.எல்.ஏ., கருணாஸ் மீது வழக்குகள் பதியப் பெற்று சிறையில் அடைக்கப் பட்டார். தொடர்ந்து அவர் மீது, ஐபிஎல் போட்டிகளின் போது சென்னையில் நடந்த கலவரங்கள் தொடர்பில் பதிவு செய்யப் பட்டிருந்த வழக்குகளின் அடிப்படையில் மீண்டும் கைது செய்யப் பட்டார். இந்த இரு வழக்குகளில் இருந்தும் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் கருணாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப் பட்டது.
இதை அடுத்து அவருக்கு ஜாமின் கிடைத்தது. அதைத் தொடர்ந்து இன்று காலை சிறையில் இருந்து வெளியே வந்தார் கருணாஸ்.
அப்போதுஅவர், உண்மை நின்றது, நீதி வென்றது என சிறையில் இருந்து வெளிவந்த கருணாஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
தவறு செய்யும் அதிகாரிகளை தண்டிக்காமல் தம்மீது தமிழக அரசு பொய் வழக்குபோட்டுள்ளது என்று கூறிய கருணாஸ், தம்மீது ஆயிரம் பொய் வழக்குகள் போட்டாலும் எதிர் கொள்வேன் என்று தெம்பாகக் கூறினார்.



