நிவாரணப் பொருள்களில் ஜெயலலிதா படம் ஒட்டச் சொல்வது யார்?: பரபரப்புத் தகவல்

சென்னை:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களுக்கு வெளி மாநிலம் மற்றும் தமிழ் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வெள்ள நிவாரணத்திற்காக வந்த பொருட்களில் ஜெயலலிதாவின் படம் ஒட்டியேத் தீர வேண்டும் என அதிமுகவினர் அழிச்சாட்டியம் செய்வதாக சமூக வலைத்தளங்களில் நேற்று மதியம் முதல் செய்திகள் வரத்தொடங்கின.

 

மழை நிவாரணப் பணிகளில் ஆட்சிக்கு எதிராக பல செய்திகள் வந்த போது இது என்னடா புது தொந்தரவு என எண்ணிய அதிமுக தலைமை இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

இதை அடுத்து,
நிவாரணங்களை கொண்டு வரும் வாகனங்களை தொடர்ந்து கண்காணிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டது. வாகனங்கள் எந்த வழியாக செல்ல வேண்டும் என சொல்லுவதற்காக சில போலீசாரும் லாரிகளில் ஏறிக் கொண்டனர். மதியம் 1 மணிக்கு திருத்தணி பைபாஸ் சாலையில் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு லாரியை மடக்கிய ஒரு கும்பல், கை நிறைய திருவள்ளூர் அதிமுக எனக் கூறிக் கொண்டு சிலப் போஸ்டர்கள், பேனர்களை கட்ட வந்துள்ளனர்.

அவர்களை மடக்கிப்பிடித்து விசாரித்த போலீசார் யார் என்ன என கேள்விகள் கேட்டவுடன் முன்னுக்குப்பின் பதில் சொல்லியுள்ளனர்.

அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் போது சென்னையில் இருந்து ஸ்டிக்கர், பேனர்கள், கொடிகள் வந்ததாகவும், கூடவே தலைக்கு ரூ. 5ஆயிரம் பணம் கொடுத்து சென்னைக்கு வரும் வெளி மாநில லாரிகளில் இந்த பேனர்கள் கட்டினால்தான் சென்னைக்குள் செல்ல முடியும் என சொல்லி ஒட்டச் சொல்லியதாகவும் கூறியுள்ளனர்.

தொடர்ந்து சென்னையில் இருந்து தங்களுக்கு இவ்வாறு போன் வந்ததால்தான் நிவாரணப் பொருள்கள் ஏற்றி வந்த லாரிகளை வழிமறித்ததாகவும்
அவர்கள் கூறியுள்ளனர்.

அவர்கள் கூறிய செல்போன் நம்பர்களின் மூலம் சென்னையில் இருந்து அவர்களை இயக்கிய பிரமுகரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், இதே போல் செயல்பட்ட ஒரு கும்பலை சேலம் ஆத்தூர் அருகிலும் பிடித்துள்ளனர். அவர்களும் சென்னையில் இருந்து தான் பணம் வந்ததாகக் கூறியுள்ளனர். இவ்வாறு பணம் எதற்கு அனுப்பப் படுகிறது. இதில் அரசியல் இருக்குமா? முதல்வரின் பெயரால் நடப்பது போல் காட்டப்படுவதன் மர்மம் என்ன என்பது இப்போது அதிகம் விவாதிக்கப்படுகிறது.