வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக அளித்த நிவாரணம் என்ன?

தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டு இருக்கும் அதிமுக கட்சியின் சார்பில் சொந்த செலவில் வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு என்ன நிவாரண உதவி செய்தார்கள் எனும் கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர்.

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலிதாவின் கூட்டம் எந்த மாவட்டத்தில் நடைபெற்றாலும் அந்த மாவட்டமே ஸ்தம்பிக்கும் அளவு அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் எப்போதும் கூடுவது வழக்கமான விஷயம்தான்.

அதேபோல் எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சியின் முக்கியமான தலைவர் கூட்டம் எந்த மாவட்டத்தில் நடந்தாலும் அந்த மாவட்டமே ஸ்தம்பிக்கும் அளவு கூட்டத்தைக்
கூட்டுவதில் எந்த கட்சியினரும் விதிவிலக்கு அல்ல .

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு ஜாதி, மத, வேறுபாடுகள் இன்றி பொதுநல நோக்கத்தில் உடனடியாக உதவி செய்ய பல மாவட்ட பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் முன்வந்து செய்து கொண்டு உள்ளனர்.

அவ்வாறு அந்த அந்த மாவட்டத்தில் பாதிப்படைந்தவர்களுக்காக பொதுமக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்கள்மீதும் ஜெயலலிதா புகைப்படத்தை ஒட்டி இலவச சுய விளம்பரம் தேடுவது தொடர்ந்து அரசியல் ஆதாயம் அடையும் செயல் என தமிழக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சட்டமன்றத் தொகுதியில் நேற்று வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு அமைச்சர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கியபோது கூட ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் கட்சியின் இரட்டை இலை சின்னத்துடன் கூடிய பதாகையை காட்டி நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளனர்.

மேலும் அதிமுக கட்சியை சேர்ந்த விசுவாசிகள் சமூக ஊடகங்களில் “அங்கு உதவி தேவை, இங்கு உதவி தேவை” என பொதுமக்களை உதவி செய்ய கோரிக்கை விடுத்து பதிவுகளை பதிவிடுகிறார்கள். அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் என்ன உதவி செய்தார்கள் எனும் கேள்வியை எழுப்பியுள்னர்.

மக்களின் வரிப்பணத்தில் அரசாங்கத்தால் கொடுக்கப்படும் நலத் திட்டங்களில் எல்லாம் ஜெயலலிதாவின் புகைப்படத்தைப் போட்டு இலவசமாக சுய விளம்பரம் தேடிக் கொள்வது மிக மட்டமான வெட்கப்பட வேண்டிய கீழ்த்தரமான செயல் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பெரும்பாலோர் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

மேலும் அரசாங்கத்தால் கொடுக்கப்படும் நலத் திட்டங்களை எல்லாம் எப்போதும் “நான் செய்தேன், நான் செய்தேன்” என ஜெயலலிதாவும் , அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் “எங்கள் அம்மா செய்தார், எங்கள் அம்மா செய்தார்” என சுய புராணம் பாடுவதும் மானம்கெட்ட செயல் என அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பெரும்பாலோர் பரவலாகக் கூறுகின்றனர்.

“தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக அளித்த நிவாரணம் என்ன?” எனும் கேள்வியை பெரும்பாலோர் எழுப்பியுள்ளனர்.மேலும், “ஒருவேளை பாதிப்படைந்தவர்களுக்காக பொதுமக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்களை எல்லாம் அதிமுக கட்சியினர்தான் கொடுத்தோம்” என ஒரு பொய்யான அறிவிப்பைக் கொடுத்தாலும் கொடுப்பார்கள் என்றும் பலர் பேசி வருகிறார்கள்.