12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் : மருத்துவர் ராமதாஸ்

 
 
 
தமிழ்நாட்டில் வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 12ஆம் வகுப்பு வரை தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்ச்சி வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினர் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
 
மேலும் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் கூறியுள்ளதாவது: –
 
சென்னையில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் வீடுகளுக்கு உள்ளேயும், வெளியேயும் பல அடிக்கு வண்டல் மண் படிந்துள்ளது. வீடுகளில் இருந்த படுக்கை, தலையணைகள் போன்ற வீட்டு பயன்பாட்டு பொருட்களும், உணவுப் பொருட்களும் வெள்ள நீரில் ஊறி பாழாகி நாற்றம் எடுக்கத் தொடங்கிவிட்டன. இவ்வாறு பாழான பொருட்கள் சாலைகளிலும், தெருக்களிலும் கொட்டப்பட்டிருப்பதால் அவற்றிலிருந்து நோய்க்கிருமிகள் பரவும் ஆபத்து உள்ளது. அதேபோல் கிட்டத்தட்ட வெள்ளம் பாதித்த அனைத்துப் பகுதிகளிலும் கழிவு நீரும், குடீநீரும் கலந்திருப்பதால் அதன் மூலமாக நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.
 
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரின் சில பகுதிகளில் இன்னும் வெள்ளம் முழுமையாக வடியவில்லை என்றாலும், பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது. வெள்ளம் வடியாத பகுதிகளில் இயல்பு நிலையை ஏற்படுத்தவும், மற்ற பகுதிகளில் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டியது அவசியமாகும்.
 
நோய்கள் பரவுவதைத் தடுக்க வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் குவிந்து கிடக்கும் குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும். சென்னை மற்றும் வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர் என்ற போதிலும், சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு பார்க்கும்போது இது போதுமானது அல்ல. எனவே, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் பணியாளர்களை அழைத்து வந்து துப்புரவு பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
 
அதுமட்டுமின்றி, வெள்ளம் பாதித்த அனைத்து பகுதிகளிலும் கொசு ஒழிப்பு புகைத் தெளித்தல், கிருமி நாசினி தெளித்தல், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள், பாதாள குடிநீர் சேமிப்புத் தொட்டி உள்ளிட்ட அனைத்து குடிநீர் ஆதாரங்களிலும் குளோரின் சேர்த்தல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் அரசும், சென்னை மாநகராட்சியும் மேற்கொள்ளவேண்டும். அனைத்து வட்டங்களிலும் மருத்துவ முகாம்களை நடத்தி நோய்த்தடுப்பு மருந்து வழங்க வேண்டும்.
 
தொடர்ந்து பெய்த மழையால் அனைத்து உடைமைகளையும் இழந்து விட்ட மக்கள், புதிதாக வாழ்க்கையைத் தொடங்க வழியில்லாமல் தவிக்கின்றனர். வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் அவர்கள் வாழ வழி காட்ட வேண்டியது தமிழக அரசின் கடமை என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
 
அதன்படி வெள்ளத்தில் சிக்கி மீண்ட மக்கள் இயல்பான வாழ்க்கை வாழ்வதற்கு வசதியாக அனைத்து குடும்பங்களுக்கும் தலா ஒரு மண்ணெண்ணெய் அடுப்பு, இரு பாய்கள் மற்றும் தலையணைகள், 25 கிலோ அரிசி, 10 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை கொண்ட தொகுப்பை பாதிக்கப்பட்ட மக்களின் இல்லங்களுக்கே கொண்டு சென்று வழங்க அரசு முன்வர வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.
 
மேலும் வெள்ள நிவாரணமாக அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவியை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு தடையாக இருப்பதாலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள சிறிதளவு பணமும் மதுக்கடைகளுக்கு செல்வதாலும் அனைத்து மதுக்கடைகளையும் இரு வாரங்களுக்கு மூட வேண்டும்.
 
இதற்கெல்லாம் மேலாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்களின் நிலைமை தான் மிகவும் பரிதாபமாக உள்ளது. வெள்ளத்தின் கோரத் தாண்டவத்திற்கு உடைமைகள், ஆடைகள் ஆகியவை மட்டுமின்றி பாட நூல்களையும் மாணவர்கள் இழந்துள்ளனர்.
 
குடிசைகள், ஆற்றங்கரையோரப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கடந்த ஒரு மாதமாக அனுபவித்து வரும் துயரம் அவர்களை மனதளவில் மிக மோசமாக பாதித்திருக்கிறது. சில மாணவர்கள் தங்கள் கண் எதிரிலேயே குடும்ப உறுப்பினர்களை வெள்ளத்திற்கு பலி கொடுத்துள்ளனர்.
 
இதனால் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள மாணவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப பல மாதங்கள் ஆகும். இம்மாணவர்களால் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அரையாண்டுத் தேர்வுகளை எழுதுவதோ, மார்ச்&ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள இறுதித்தேர்வுக்கு தயாராவதோ சாத்தியமில்லை.
 
கடந்த 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் நச்சுவாயுக் கசிந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்; லட்சக்கணக்கானோர் பாதிக்கப் பட்டனர். மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாயினர். இதனால் போபால் மாவட்டத்தை பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவித்து அங்கு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்படி அப்போதைய மத்திய பிரதேச முதலமைச்சர் அர்ஜுன்சிங் ஆணையிட்டார். அதன்படி அங்கு அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டது.
 
அதேபோல், தமிழ்நாட்டிலும் வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 12ஆம் வகுப்பு வரை தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்ச்சி வழங்க வேண்டும். அதற்கு முன்பாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள அரையாண்டுத் தேர்வுகளை வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும் ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் கூறியுள்ளார் .
Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.