சிமி பெயரால் இந்து முன்னணி அலுவலகத்துக்கு மிரட்டல் கடிதம்

சென்னை:
சென்னை இந்து முன்னணி அலுவலகத்திற்கு தடை செய்யப்பட்ட சிமி அமைப்பின் பெயரால் மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. மிரட்டல் கடிதம் குறித்து காவல்துறை ஆணையரிடம் இந்து முன்னணி மாநகர செயலாளர் எஸ்.எஸ். முருகேசன் புகார் கொடுத்துள்ளார்.

திப்பு சுல்தான் குறித்து இந்து முன்னணி மேற்கொண்டு வரும் பிரசாரம் இஸ்லாம் மரபுக்கு எதிரான அவதூறாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்தக் கடிதத்தில், கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் பகுதி இந்து முன்னணித் தலைவர்களை கொல்லப் போவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் குறித்து அந்த அமைப்பு தெரிவித்த தகவலில், அரசின் மெத்தனப்போக்கால் இஸ்லாமிய பயங்கரவாதச் சதி செயல், மிரட்டல் தொடர்கிறது என்றும், இது வரை வந்த மிரட்டல் கடிதம் குறித்து முறையாக விசாரணை நடத்தியிருந்தால், அதற்கு முளையாக செயல்படுபவரைகண்டறிந்து தண்டித்திருக்கலாம். காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு செயலழிக்க செய்யப்பட்டு கிடக்கிறது. இந்நிலையில் பயங்கரவாதிகள் சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகளை பரப்பியும், தவறாக சித்தரிக்கப்பட்ட படங்களையும் வெளியிட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், இதனை முளையிலேயே கிள்ளி எறிந்தால் பிரச்னை தீர்ந்துவிடும். காவல்துறை விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நன்றி,
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(ஏ.டி. இளங்கோவன்)
மாநகரப் பொதுச் செயலாளர்