நான் நேசித்தவர்களே விலகிச் சென்றனர்; எனக்கென்று உலகம் இல்லை: வைகோ வேதனை

சென்னை:

மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தவர்களை நான் அதிகம் நேசித்தேன். எனக்கென்று தனிப்பட்ட உலகம் இருந்ததில்லை. தொண்டர்களே என் உலகம் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செய லாளர் வைகோ., வெளியிட்டுள்ள அறிக்கை:-

பேரறிஞர் அண்ணாவின் இயக்கத்தில் 1964-ல் கல்லூரி மாணவனாக இணைந்து, தி.மு.க.வை என் உயிரினும் மேலாக நெஞ்சில் ஏந்தி னேன். 1993 அக்டோபர் 3-ந்தேதி கொலைப்பழி சுமத்தப்பட்டபோது என் தலையில் பேரிடி விழுந்தது போல் துடித்தேன். என் உள்ளம் நொறுங்கியது.

தி.மு.க.வின் ஐந்து தொண்டர்கள் எனக்கு ஏற்பட்ட நிலைமைக்காக நெருப்புக்குத் தங்கள் உயிர் களைத் தந்தனர். இந்தத் தூய தொண்டர்களின் தியாக நெருப்பில் உதித்ததுதான் மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகம்.

22 ஆண்டுகள் கடந்து விட்டன. அணு அளவும் தன்னலம் இன்றித் தமிழர் நலனுக்காகவும் தாய்த் தமிழகத்தின் உயர்வுக்காகவும், தந்தை பெரியார், பேரறி ஞர் அண்ணாவின் கொள் கைகளைக் காப்பதற்காகவும், நானும் எனது தோழர் களும் போராடி வந்திருக் கின்றோம்.1996-ம் ஆண்டு சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு. க.வின் தலைமை எங்கள் இயக்கத்தில் இருந்தவர்களை இச்சகம் பேசி அழைத்து, ம.தி.மு.க.வுக்கு மூடு விழா என்று செய்தி வெளியிட்டது.

2006-ம் ஆண்டில், எங்கள் இயக்கத்தின் உயர் பொறுப்புகளில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும், அமைச்சர் பதவி எனும் ஆசை வார்த்தை கூறி தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தையே நிர்மூலம் செய்து விட பொதுக்குழு உறுப்பினர்களுக்குப் பெரும் பணம் தருவதாகக் கூறி வளைக்க முயன்று, போட்டிப் பொதுக்குழுவுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தது. அந்த முயற்சியிலும் தி.மு.க., பரிதாபகரமாகத் தோற்றுப் போனது. கொள்கை மாமணிகளான பொதுக்குழு உறுப்பினர்கள் எங்கள் இயக்கத்தைக் காப் பாற்றினார்கள்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தங்கள் கூட்டணியில் சேர்க்க முயல்வது; அது பலிக்காவிட்டால், எங்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு பதவி உள்ளிட்ட பல்வேறு ஆசை வார்த்தைகளைக் கூறி ம.தி.மு.க.வை வீழ்த்துவது எனத் திட்டமிட்டு, பல மாதங்களாகவே ரகசிய மாக பல்வேறு முனை களில் சதிச்செயல்கள் நடைபெறுவதை அறிந்து கொண்டேன்.

என்னை விட எங்கள் இயக்கம் மேலானது; நிரந்தர மானது என்பதனால், பொது மக்களிடம் கழகத்தின் நம்பகத்தன்மையைப் பாது காக்கவும், எக்காரணத்தைக் கொண்டும் திராவிட முன் னேற்றக் கழகத்துடன் கரம் கோர்ப்பது இல்லை என்று, இயக்கத்தில் பெரும் பாலோர் கருத்தின் அடிப் படையில்தான் அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய இரு கட்சி களுடனும் எக்காரணத்தை முன்னிட்டும் உடன்பாடு கொள்வது இல்லை என்று முடிவு எடுத்தோம்.

உயர்நிலைக்குழுவில் விவாதித்து எடுக்கப்பட்ட முடிவை, மாவட்டச் செய லாளர்கள் கூட்டத்தில் முன் வைத்தபோது, அக்கூட்டத்தில் எவரும் இந்தக் கருத்துக்கு மறுப்புக் கூறவில்லை.

இயக்கத்தில் இருந்து விலகிச் சென்றவர்களை நான் மிகவும் நேசித்து வந்தேன். ஆனால், சில மாதங்களாகவே தி.மு.க. தலைமையில் இருந்து அவர்களை ரகசிய மாக அணுகி வந்த செய்தி களை அறிந்து நான் அதிர்ச்சி யுற்றேன். விலகிச் சென்ற வர்கள் மீது நான் எந்தக் குறை யும் கூற விரும்பவில்லை. முடிவு எடுப்பது அவர்களது உரிமை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தை கள் ஆகிய கட்சிகளோடு மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகம் இணைந்து, ஜூலை மாதத்தில் இருந்து கடந்த ஐந்து மாதங்களாகப் பல கட்டங்களில் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டு, மக்கள் நலக் கூட்டு இயக்கத்தின் சார்பில், மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி இருக்கின்றோம்.

தமிழக அரசியலில் இது வரை இல்லாத அளவில், இக்கூட்டணியின் குறைந்த பட்ச செயல்திட்டத்தையும் வெளியிட்டுள்ளோம். நடு நிலையாளர்கள், நல்லோர் மனதில் எல்லாம் இதற்குப் பெரிய வரவேற்புக் கிடைத்துள்ளது. இந்தப் பின்னணியில், மிகுந்த ஆத்திரம் கொண்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை எப்படியாவது சிதைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தி.மு.க.வின் தலைமை அனைத்துப் படைக்கலன்களையும் பயன் படுத்துகிறது.

தற்போது கழகத்தை விட்டு விலகி தி.மு.க.வில் சேர்ந்துள்ள சகோதரர்கள் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. எல்லையற்ற அன்போடும் பாசத்தோடும் பரிவோடும் உடன்பிறவாத சகோதரர்களாக நேசித்து நான் பழகி வந்த காரணத்தால், அவர்கள் விலகிச் சென்றதில் என் இருதயம் காயப்பட்டு வலிக்கத்தான் செய்கிறது.

போய்ச் சேருகின்ற இடத்தின் தலைமையைத் திருப்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் என் மீது கூறும் குறைகளுக்காக நான் ஆத்திரப்படவில்லை. இத்தனை ஆண்டுக் காலம் என்னோடு கரம் கோர்த்து உழைத்ததற்காக அந்த இனிய தோழர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனக்கென்று ஒரு உலகம் இல்லை. எங்கள் இயக்கமும், தொண்டர்களும்தான் என் உலகம். கடுமையான சோதனைகளைத் தாங்கி நெஞ்சுறுதியோடு பயணித்துக் கொண்டு இருக்கின்றோம். எங்கள் இயக்கத்தின் மூல பலமே தொண்டர்கள்தான். சபலத்திற்கோ சஞ்சலத்திற்கோ எள் அளவும் ஆட் படாத தொண்டர்களும், அவர்களைத் தக்க முறையில் வழிநடத்திச் செல்லும் தளகர்த்தர்களும், இயக்கத்தைப் புதிய வலிவுடன் முன்னெடுத்துச் செல்வோம்.

– இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.