தங்களுக்காக பாடுபடுவது யார் என்பதை தேர்தலில் மக்கள் சொல்வார்கள்: விஜயகாந்த்

சென்னை:

தங்களுக்காகப் பாடுபடுபவர்கள் யார் என்பதை தேர்தல் நேரத்தில் மக்கள் தங்கள் பதிலாகத்தெரிவிப்பார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையை சுத்தம் செய்ய ஆயிரக்கணக்கான துப்புரவு பணியாளர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டதாகவும், அவர்களின் பணிச்சுமைக்காக கூடுதல் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டதாக அ.தி.மு.க. அரசு கூறி வருகிறது. ஆனால் சென்னை வந்துள்ள ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு சரியான உணவும், இருப்பிட வசதியும் செய்து தரவில்லையென குற்றம் சாட்டுகின்றனர்.

நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அனைத்துதரப்பு மக்களும் ஒன்று சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை அன்று துப்புரவு பணியில் ஈடுபட்டனர். அதை பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் பார்த்த பல தரப்பினரும், அரசை எதிர்பார்த்து ஏமாந்தது போதுமெனக் கருதி, தாங்களாகவே முன்வந்து தங்களது பகுதிகளில் தன்னார்வத்தோடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதை தற்போது பார்க்கமுடிகிறது.

மக்களை நேசிக்கின்ற தலைவர் யார்? மக்களுக்காக உழைக்கின்ற தலைவர் யார்? சொகுசான, சுகபோக வாழ்க்கை வாழ்பவர் யார்? என்பதை தமிழக மக்கள் நன்கு தெரிந்து கொண்டார்கள். இனியும் அவர்களை யாராலும் ஏமாற்ற முடியாது. தேர்தல் காலத்தில் இதற்கெல்லாம் பதிலளிக்க தயாராக உள்ளார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.