இலங்கை கடற்படையால் கைதான மீனவர்கள், படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் கடிதம்

சென்னை:

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 41 பேரையும், 56 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில்…

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து கடந்த 17-ந்தேதி எந்திரப்படகில் மீன் பிடிக்கச்சென்ற 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்துள்ள சம்பவம் நடந்திருப்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். அவர்கள் 4 பேரும் இலங்கையில் உள்ள கங்கேசன்துறைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்களை மிகுந்த காழ்ப்புணர்ச்சியோடு தொடர்ந்து இலங்கை அதிகாரிகள் அணுகுவது துரதிருஷ்டவசமானது. பாக் நீரிணைப் பகுதியில் தங்களின் ஜீவாதாரமான மீன்பிடி தொழிலில் அமைதியாக ஈடுபடும் பாரம்பரிய உரிமையில் இலங்கை தலையிடுகிறது.

கடந்த சில வாரங்களில் 41 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது தமிழக மீனவர்களின் 56 படகுகள் இலங்கை வசம் உள்ளன. இந்திய-இலங்கை இடையேயான சர்வதேச கடல் எல்லை விவகாரம், இந்திய சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பது உங்களுக்குத் தெரியும்.

1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களால்தான் இலங்கைக்கு கச்சத்தீவு விடுவிக்கப்பட்டதோடு, கடல் எல்லை பிரச்சினையும் உருவானது இந்த ஒப்பந்தங்களை எதிர்த்து நான் தனிப்பட்ட முறையில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசு தன்னை இணைத்துள்ளது.

பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடி தொழிலில் உள்ள நிர்ப்பந்தங்களை நிரந்தரமாக குறைப்பதற்காகவும், ஆழ்கடல் மீன்பிடியை விரிவாக்கம் செய்வதற்கும் எனது அரசு ரூ.51.3 கோடி செலவில் சில முன்னோடித் திட்டங்களை தீட்டியுள்ளது. ஆழ்கடல் மீன்பிடி உபகரணங்களை 50 சதவீத மானியத்தில், அதாவது அதிகபட்சம் ரூ.30 லட்சம்வரை மானியம் வழங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் ஆழ்கடல் மீன்பிடிக்காக சிறப்பு ஒருங்கிணைந்த திட்டத்துக்காக ஆயிரத்து 520 கோடி ரூபாய் மற்றும் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் 10 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்ற எனது கோரிக்கை, கடந்த ஜூன் 3-ந்தேதி உங்களிடம் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை.

தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்வதும், அவர்களின் படகுகளை பிடித்து வைத்துக்கொள்வதுமாக, அதுவும் இந்த பண்டிகை காலத்தில் இலங்கை அரசு நடந்துகொள்வது, தமிழக மீனவர்கள் இடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக இந்தப் பிரச்சினையை நீங்கள் இலங்கை அரசின் உயர்மட்ட அதிகாரிகளிடம் எடுத்துச்செல்ல வேண்டும்.

தமிழக மீனவர்களின் உணவுப் பூர்வமான இந்த பிரச்சினையில் தலையிட்டு, அவர்களின் துயரைத் துடைப்பதில் மத்திய அரசு உறுதியாக செயல்படவேண்டும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள 4 மீனவர்கள் உட்பட 41 மீனவர்களையும், 56 படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேசுவதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை அறிவுறுத்துங்கள்.

மீன்பிடிக்கச் சென்றபோது, இலங்கை கடற்பகுதியில் கடந்த 8-11-15 அன்று எந்திரப்படகு பழுதடைந்ததால், அங்கு தவித்துக்கொண்டிருக்கும் 4 மீனவர்களும் விரைவில் தமிழகம் திரும்புவதற்கும் நீங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். – என்று கோரியுள்ளார்.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.