சிபிஐ-யை பாஜக., துஷ்பிரயோகம் செய்து பழிவாங்குகிறது: கார்த்தி சிதம்பரம்

சென்னை:

சிபிஐ.,யை பாஜக., துஷ்பிரயோகம் செய்து, காங்கிரஸ் கட்சித் தலைவர்களை பழிவாங்குகிறது என்று காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பா.ஜனதா தலைமையிலான அரசு தேர்தலின்போது இந்திய மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு, எதிர்கட்சியினர் குறிப்பாக காங்கிரஸ் தலைவர்களை பழிவாங்கும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறை ஆகியவற்றை துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர்கள் குறிப்பாக சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மீது எடுக்கப்படும் இந்த பழிவாங்கும் செயல்களை காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்ல, இந்திய நாட்டு குடிமக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காழ்ப்புணர்ச்சியில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி பா.ஜ.க.வை சார்ந்த சில அரசியல் வியாபாரிகள் வழக்குகளை தொடர்ந்துள்ளது ஜனநாயக படுகொலையாகும்.

காங்கிரஸ் பேரியக்கமும், அதன் தலைவர்களும் இவ்வாறான பூச்சாண்டிகளுக்கு பயப்பட மாட்டார்கள். இளம் தலைவர் ராகுல்காந்தியின் பின்னால் லட்சோபலட்சம் தொண்டர்கள் எதையும் எதிர்கொள்ளும் உறுதியுடன் உள்ளனர். மோடி அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இத்தகைய இழிவான ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.