55 பவுன், ரூ.3 லட்சம் கொள்ளை என வழக்கறிஞரின் மனைவி போலீஸிடம் பொய் புகார் கொடுத்து நாடகமாடியது அம்பலம் !

 
 
மதுரை அனுப்பானடி பாண்டியன் நகர் பனகல் தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது65) வழக்கறிஞர், இவர் மனைவி சந்திரகாந்தி, மாமியார் சுந்தரி ஆகியோருடன் வசித்து வருகிறார்.
 
வழக்கறிஞரின் மனைவி தெப்பக்குளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தெரிவித்ததாவது:-
 
நேற்று (17-12-2015) இரவு இவரது வீட்டுக்கு 4 பேர் கொண்ட கும்பல் மஞ்சள் பையுடன் அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என்று கூறி வந்தனர். இதை நம்பிய பெண்கள் கதவை திறந்து விட்டனர்.
 
வேகமாக வீட்டுக்குள் புகுந்த கும்பல் 3 பேரையும் கத்தியை காட்டி மிரட்டினார்கள். சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என்று கூறியவாறு வக்கீல் மற்றும் மனைவி, மாமியாரை வீட்டில் உள்ள ஒரு அறையில் தள்ளி பூட்டினார்கள்.
 
பின்னர் ‘மர்ம’ கும்பலை சேர்ந்தவர்கள் வீட்டில் மற்றொரு அறையில் இருந்த பீரோவில் இருந்து 55 பவுன் நகைகள், ரூ.3 லட்சத்து 12 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்று விட்டனர் என புகாரில் கூறி இருந்தார்.
 
புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர காவல் துணை ஆணையாளர் (குற்றம்) உமையாள்,, உதவி காவல் ஆணையாளர் ஜோஸ் தங்கையா, ஆய்வாளர் வேல்முருகன், மற்றும் தெப்பக்குளம் காவல் நிலையத்தினர் வழக்கறிஞர் வீட்டுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். துப்பறியும் மோப்பநாயும் விசாரணைக்கு பயன்படுத்தப்பட்டது. கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து காவல் துறையினர் புகார் அளித்த சந்திரகாந்தி உட்பட பலரிடம் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர்.
 
வழக்கறிஞர் மனைவி சந்திரகாந்தியின் அக்காவின் பையன் சரவணனிடம் மேற்கொண்ட நடத்திய புலன் விசாரணையில் சந்திரகாந்தி 55 பவுன் நகையை மதுரை புதூர் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் நகையை அடகு வைத்து விட்டு பொய் புகார் கொடுத்துள்ளதாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளாராம்.
 
சரவணன் கொடுத்த தகவலின் அடிப்படையில் சந்திரகாந்தியிடம் காவல் துறையினர் மீண்டும் விசாரணை மேற்கொண்டபோது 55 பவுன் நகையை அடகு வைத்தை அவரது கணவருக்கு தெரியாமல் மறைக்கவே நகை மற்றும் ரூ.3 லட்சம் கொள்ளை போனதாக பொய் புகார் கொடுத்து சந்திரகாந்தி நாடகமாடியது தெரிய வந்ததாம்.
 
மேலும் சந்திரகாந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் பதிவு செய்த முதலாவது புலனாய்வு அறிக்கையை ரத்து செய்து விட்டதாகவும் பரவலாக சொல்லப்படுகிறது.
 
காவல் துறையினரிடம் பொய்யான ஒரு புகாரை எவராவது அளித்தால் அவர் மீது பொய்யான புகாரை அளித்தமைக்காக சட்டத்தின் பிரகாரம் வழக்கு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது.
 
மதுரை மாநகர காவல் துறையினரிடம் 55 பவுன், ரூ.3 லட்சம் கொள்ளை போனதாக பொய் புகார் கொடுத்து நாடகமாடிய
சந்திரகாந்தி மீது பொய்யான புகாரை அளித்தமைக்காக வழக்கு பதிவு செய்யாமல் விடுவார்களா என்ன ?