முன்னாள் உலக அழகி நடிகை ஐஸ்வர்யாராய் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். நடிகை ஐஸ்வர்யா ராயின் 45ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.
1994ஆம் ஆண்டு உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டு, உலகின் கவனத்தையே தன் பக்கம் ஈர்த்தார். பின்னர் சினிமா உலகில் நடிக்கத் தொடங்கினார். மணிரத்தினம் இயக்கிய இருவர் தமிழ்ப் படத்தில் நடிகையாக அறிமுகமானார் ஐஸ்வர்யா ராய்! அதன் பின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் இரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து, பாராட்டுகளைப் பெற்றார்.
சிறிய வயதில் உச்சத்தைத் தொட்ட ஐஸ்வர்யா ராய்க்கு கவிஞர் வைரமுத்து எழுதிய பாடலின் வரிகளைச் சொல்லி ‘50கேஜி தாஜ்மகால்’ என்று செல்லமாய்க் கூப்பிட்டது ரசிகர் உலகம்!
அன்று முதல் தற்போது வரை 22 ஆண்டுகளாக பாலிவுட்டின் முன்னணி நடிகையாக நீடித்து வருகிறார். ஹிந்தி திரையுலக ஜாம்பவான் அமிதாப் பச்சன் குடும்பத்தின் மருமகள் ஆன பின்னும், திரையுலக வெற்றிக்கொடி மேலும் மேலும் பறக்கத்தான் செய்தது. கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் பெண் குழந்தையுடன் பொது இடங்களில் அவர் செல்லும்போது, தன் அழகால் காண்போரை வசீகரிக்கும் எளிய அழகு ஐஸ்வர்யா ராய்க்கு!
இன்று 45 ஆவது பிறந்த நாள் காணும் ஐஸ்வர்யா ராய்க்கு ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.




