நாடு திரும்பும் வழியில் பாகிஸ்தானுக்கு மோடி திடீர் விஜயம்

லாகூர்:

ஆப்கானிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து இந்தியா வரும் வழியில், யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் சென்றார்.

லாகூர் விமான நிலையம் சென்ற பிரதமர் மோடியை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விமான நிலையத்திற்கு நேரில் வருகை தந்து கட்டித் தழுவி வரவேற்றார். இரு தலைவர்களும் சில நிமிடங்கள் சிரித்து பேசியவாறே நடந்து சென்றனர். தொடர்ந்து பாகிஸ்தானின் உயர்மட்ட அதிகாரிகளை நவாஸ் ஷெரீப் அறிமுகம் செய்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து ஜத்தி உம்ரா பகுதியில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இல்லத்திற்கு பிரதமர் மோடி புறப்பட்டார். அங்கு இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். பிரதமர் மோடியுடன் 120 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவும் சென்றது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த பேச்சுவார்த்தை சுமார் 6.50 மணியளவில் நிறைவுக்கு வந்தது. இதையடுத்து நவாஸ் ஷெரீப் இல்லத்தில் இருந்து புறப்பட்ட மோடி ஹெலிகாப்டர் மூலம் லாகூர் விமான நிலையம் வந்தார். அங்கிருந்து தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த போது, அவரது அழைப்பை ஏற்று திடீரென பாகிஸ்தானுக்கு மோடி பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தியை வெளியிட்டார். மேலும், நவாஸ் ஷெரீப்பின் வீட்டில் அவரது பேத்திக்கு நேற்று திருமணம் என்பதால், வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. அதற்கும் வாழ்த்து சொல்லும் விதமாக அவரது திடீர் பயணம் அமைந்தது.

பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மோடி பாகிஸ்தான் செல்வது இதுதான் முதல் முறை. பிரதமர் மோடியின் இந்த திடீர் பாகிஸ்தான் பயணம் உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.