தேர்தல் கூடுதல் நிதி திரட்ட தொண்டர்களுக்கு வேண்டு கோள்விடுத்த கருணாநிதி

 
 
 
திமுக கட்சியினர் இதுவரை திரட்டிய 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நிதி முக்கியமான செலவுகளுக்குக் கூட போதுமானதாக இல்லை என்பதால் கூடுதல் நிதி திரட்டித் தருமாறு திமுக தலைவர் கருணாநிதி கட்சித் தொண்டர்களுக்கு வேண்டு கோள்விடுத்துள்ளார்.
 
தேர்தல் நிதி தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-
 
2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நிதியாக இதுவரையில் 21 கோடியே 93 லட்சத்து 96,534 ரூபாய் சேர்ந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
 
அதிமுகவினர் வைத்துள்ள நிதியை ஒப்பிடும்போது இது கடுகளவுதான் என்று கூறியுள்ள கருணாநிதி, இந்த தேர்தல் நிதி, தேர்தலைச் சந்திப்பதில் முக்கியமான செலவுகளுக்குக்கூடப் போதாது என்று தெரிவித்துள்ளார்.
 
எனவே கூடுதல் தேர்தல் நிதி திரட்டப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள திமுக தலைவர், அக்கட்சித் தொண்டர்கள் தங்கள் சக்திக்கு உட்பட்டு எந்த ஒரு தொகையையும் தேர்தல் நிதியாக வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார். வெள்ளிக் காசுகளாக இருந்தாலும் கூட, அதை தான் தங்கக் காசுகளாகக் கருதி பெற்றுக் கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
இப்போது கொடுத்துள்ள நிதி போதவே போதாது என்பதை உணர்ந்து, பெருநிதியைக் கொண்டு வந்து தி.மு.க. நிதியோடு சேர்ப்பதிலும், தேர்தல் பணிகளைத் தொய்வில்லாமல் ஆற்றுவதிலும் தொண்டர்கள் முனைப்புக் காட்டிட வேண்டும் என்றும் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.